விஜய் ஆண்டனி படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை..!

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி `நான்’ படத்தின் மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். அதன் பிறகு தொடர்ச்சியாக `சலீம்’, `இந்தியா பாகிஸ்தான்’, `பிச்சைக்காரன்’, `சைத்தான்’, `அண்ணாதுரை’ என நடித்துவரும் விஜய் ஆண்டனி, தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் ஆண்டனி

`அண்ணாதுரை’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் உரிமையாளர் அலெக்சாண்டர் வாங்கி ரிலீஸ் செய்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ ‘அண்ணாதுரை’ படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால் எனக்கு ஏற்பட்ட  4 கோடி ரூபாய் நஷ்டத்தை விஜய் ஆண்டனியிடம் கேட்டபோது, ‘காளி’ படத்தை குறைந்த விலைக்குத் தருகிறேன். அதை விற்பனை செய்து கடனை அடைத்துக்கொள்ளுங்கள்’ என விஜய் ஆண்டனியும் அவரின் மனைவி பாத்திமாவும் கூறினார்கள். 

விஜய் ஆண்டனி

அதற்கு உடன்பட்டு 50 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட்டும் போட்டோம். எதிர்பாராத விதமாக திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் புதிய படங்களை வாங்க தயக்கம் காட்டினர். அதனால் `காளி’ படத்துக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை என்னால் உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை. ஒப்பந்தபடி பாக்கித் தொகை செலுத்த தவறியதால் `காளி’ படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக விஜய் ஆண்டனி எனக்கு கடிதம் அனுப்பினார். இப்போது இந்த ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி `அண்ணாதுரை’ படத்தில் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஒப்புக்கொண்டபடி கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறார்கள். எனவே எனக்கு ’அண்ணாதுரை’ படம் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தைக் கொடுத்துவிட்டு `காளி’ படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என நீதி மன்றத்தில் அலெக்சாண்டர் வழக்கு தொடுத்தார். வரும் ஏப்ரல் 11-ம் தேதிக்குள் 4.73 கோடி ரூபாயை விஜய் ஆண்டனி செலுத்திவிட்டு, ’காளி’ படத்தை ரீலீஸ் செய்ய வேண்டும். இல்லையெனில் படத்துக்கான தடை தொடரும் என உயர்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!