கார்ப்பரேட்களுக்கும் சமுதாய அக்கறை இருக்க வேண்டும்! - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

"கார்ப்பரேட்களுக்கும் சமுதாய அக்கறை இருக்க வேண்டும்'' என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கப் பிரச்னை முடிந்து முதல் திரைப்படமாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, மெர்குரி. மெளனப்படமானாலும் கார்ப்பரேட் க்ரைம் குறித்து மெர்குரி பேசியிருக்கும் விஷயங்கள் ஏராளம். இந்தப் படத்தின் வெற்றியைத் தன் படக்குழுவினரோடு ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று ரசித்துக்கொண்டிருக்கிறார், இந்தப் படத்தின்  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

இதன்படி, கோவையில் உள்ள தனியார் திரையரங்கில் பத்திரிகையாளர்களைச் நேற்று சந்தித்தார். அப்போது, ''மெர்குரி-க்கு  மக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. வசனமே இல்லாத படத்துக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்குமென்று நாங்கள் நினைக்கவில்லை. 
மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. கார்ப்பரேட் க்ரைம்களினால் மக்கள் சந்திக்கும்  பிரச்னைகளின் தீவிரத்தைத் தீவிரமாக இந்தப் படத்திக் சொல்லியிருக்கிறோம். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், இந்தப் படம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தமே இல்லாத நபர்களோடு போராடி சண்டை போட்டுக்கொண்டிருப்பதைவிட,  நம்முடைய உண்மையான எதிரி யார்? என்பதைக் கண்டுபிடித்து, அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதைத்தான் இந்தப் படம் மூலமாக சொல்லியிருக்கிறேன்.

 உலகத்தையே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. அதிலிருந்து தப்பிப்பதற்கு வழி தெரியவில்லை. தப்பிக்கவும் முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும். மெர்குரி படமும்  ஒரு போராட்ட வடிவம்தான். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுதான் இறுதியான முடிவை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கப் பிரச்னையின்போது, பிறமொழிப் படங்களெல்லாம் இங்கே திரையிடுகிறார்கள். அதேபோல, மொழியில்லாத மெர்குரியையும் வெளியிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், சில காரணங்களைச் சொல்லி மறுத்துவிட்டார்கள். அந்தக் காரணங்கள் நியாயமானதாக இருந்ததால், அதற்கு நாங்களும் உடன்பட்டோம்'' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!