வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (03/05/2018)

கடைசி தொடர்பு:21:40 (03/05/2018)

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவும் சர்ச்சையும்!

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் 65 -வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடந்து முடிந்துள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் 65 -வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடந்து முடிந்துள்ளது. 

விருதுபெறும் ஏ.ஆர்.ரஹ்மான்

திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்குத் தேசிய விருது வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தும். இந்த விருதுகளை வெல்லும் கலைஞர்களுக்கு, குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குவார். இந்தாண்டு 65-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் இல்லாமலே தொடங்கியது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி விருதுகளை வழங்கினார். பின்னர், குடியரசுத் தலைவர் தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட உட்பட 11 விருதுகளை மட்டுமே குடியரசுத் தலைவார் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.  

வழக்கமாக திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவரே வழங்குவார். ஆனால், இந்த ஆண்டு அமைச்சர் கையால் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்கள் விழாவைப் புறக்கணித்தனர். தொண்டிமுதலும் த்ரிக்சாச்ஷியம் படத்துக்காகச் சிறந்த துணை நடிகர் விருது ஃபகத் ஃபாசில், சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டூ -லெட் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட 60 -க்கும் மேற்பட்டோர் இந்த விருது விழாவைப் புறக்கணித்தனர். டெல்லி வந்தபிறகே, தங்களுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, `குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பின்னர், ஒவ்வொரு விழாவிலும் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே அவர் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில், இந்தச் செய்தி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், கடைசி நேரத்தில் இதுகுறித்து கேள்வி எழுந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.