தொழிலதிபரை மணந்த சோனம் கபூர்! - விழாக்கோலம் பூண்ட பாலிவுட் திரையுலகம் | Actor SonamKapoor at her wedding ceremony

வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (08/05/2018)

கடைசி தொடர்பு:18:38 (08/05/2018)

தொழிலதிபரை மணந்த சோனம் கபூர்! - விழாக்கோலம் பூண்ட பாலிவுட் திரையுலகம்

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம் இன்று மும்பையில் நடைபெற்றது. இவரின் திருமணம்தான் இன்று சமூக வலைதளங்களில் ஹாட் ட்ரெண்ட். 

சோனம்

பாலிவுட் நடிகை சோனம் கபூர், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜா-வின் திருமணம் இன்று மும்பையில் நடந்தையொட்டி பாலிவுட் திரையுலகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சோனம் கபூரும் ஆனந்த் அஹூஜாவும் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன், இன்று நண்பகல் திருமணம் நடந்தது. 

கடந்த சில நாள்களாகவே, இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் அதிகமாக வலம் வந்துகொண்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை, சோனம் கபூருக்கு நடந்த மெஹந்தி விழாவின் புகைப்படங்கள் செம வைரல். அதன் பின், நடந்த சங்கீத் விழாவில் சோனம், ஆனந்த் ஆகிய இருவரும் வெள்ளை நிற ஆடையில் ஜொலித்தனர். மேலும், கபூர் குடும்பம் மற்றும் விழாவுக்கு வந்திருந்த பாலிவுட் பிரபலங்கள் என அனைவரும் வெள்ளை நிற ஆடையிலேயே வந்திருந்தனர். இது சோனம் கபூர் திருமணத்தின் பெரிய சிறப்பாக இருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் கபூர் குடும்பதுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஒவ்வொருவராக வந்திருந்தனர். மும்பை பந்தரா பகுதியில் இருக்கும் ராக்டாலில் திருமணமும் மாலை லீலா ஹோட்டலில் பிரமாண்ட திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளது. திருமணத்துக்கு தயாராகியுள்ள சோனம் கபூர் சிவப்பு நிற ஆடையில், பாரம்பர்யமான நகைகளுடன் மிகவும் அழகாகக் காட்சியளித்தார். இவருக்கு மேட்சாக ஆனந்தும் பாரம்பர்ய உடை அணிந்திருந்தார். 

அழகிய சோனம் கபூர் மற்றும் அவரின் திருமண புகைப்படங்கள் ஒரு புறம் வைரலாகி வரும் நிலையில் மற்றொரு புறம் அவரின் திருமணத்துக்கு வரும் பாலிவுட் பிரபலங்களின் புகைப்படங்களும் மிகுந்த வைரலாகி வருகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடிவருகிறது கபூர் குடும்பம். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு, கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.