வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (11/05/2018)

கடைசி தொடர்பு:20:21 (11/05/2018)

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது..! தங்கல் நடிகை சைய்ரா வசிமின் உருக்கமான பதிவு

நான் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது என்று தங்கல் படத்தில் நடித்த சிறுமி சைய்ரா வசிம் தெரிவித்துள்ளார். 

தங்கல் படத்தில் அமீர்கானின் மகளாக சிறுமி சைய்ரா வசிம் நடித்திருந்தார். அவருக்கு இருந்த மன அழுத்தம் குறித்து, அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவருடைய ஃபேஸ்புக் பதிவில், `நான்கு வருடங்கள்வரை இருக்கும், என்னிடம் ஏதோவொன்று தவறாக இருப்பது எனக்கு தெரிந்தது. அது மன அழுத்தமாக இருக்கும் என்று நான் உணர்ந்தேன். என்னுடைய 12 வயதில் எனக்கு முதன்முறையாக அச்ச உணர்வு ஏற்பட்டது. 14 வயதில் ஒருமுறை அச்ச உணர்வு ஏற்பட்டது.

எத்தனைமுறை அந்த மாதிரியான அச்ச உணர்வு ஏற்பட்டது என்ற எண்ணிக்கை தற்போது மறந்துவிட்டது. எத்தனை முறை மருந்துகள் உட்கொண்டேன் என்பது மறந்து வருகிறது. என்னிடம் எதுவும் தவறாக இல்லை என்பதை நம்புவதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்தேன். எனக்குத் தெரியும் நான் அதனை எல்லா நேரங்களிலும் செய்தேன். அதை இப்போதும் செய்கிறேன். அந்தக் காலங்களில் பதற்றம் என்னைத் தாக்கியது. நடு இரவில் திடீரென்று அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். வெறுமையாக உணர்ந்தேன், ஓய்வின்றி இருந்தேன், பிரம்மையாக(hallucinations) உணர்ந்தேன், விளக்கமுடியாத சோர்வு, உடல்வலி, சுய விருப்பு, நரம்பு முறிவு, தற்கொலை எண்ணம் போன்றவை அந்தக் கட்டத்தில் இருந்தது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொண்டதே இல்லை. உலகம் முழுவதும் சுமார் 350 மில்லியன் மக்களை இந்த நோய் பாதித்துள்ளது. என்னுடைய சமூக வாழ்க்கை, என்னுடை வேலை, பள்ளி, குறிப்பாக சமூக வலைதளம் ஆகிய அனைத்திலிருந்தும் எனக்கு முற்றிலுமான இடைவெளி வேண்டும். புனிதமான ரமலான் மாதத்தை நான் எதிர்ப் பார்த்திருக்கிறேன். அந்த மாதம் எனக்குச் சிறந்த வாய்ப்பாக அமையும். என்னுடைய ஏற்ற இறங்கங்களில் எனக்கு துணைநின்ற அனைவருக்கும் நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.