Published:Updated:

ரெங்கநாதன் தெருவா இது?!

கவின்மலர், படம் : என்.விவேக்

பிரீமியம் ஸ்டோரி
##~##

மிழகத்தின் அங்காடித் தெரு களையிழந்து கிடக்கிறது!

 வியப்பும் ஆச்சர்யமும் கலந்த பார்வைகள் மட்டுமே பரவிக் கிடந்த ரெங்கநாதன் தெருவை இப்போது ஏக்கமும் தவிப்பும் நிறைந்த கண்களே வெறித்துப் பார்க்கின்றன. தி.நகரின் அந்த அங்காடித் தெருவுக்குள் தங்கள் அன்றாட வாழ்க்கையைப் புதைத்து வைத்திருந்த உதிரித் தொழிலாளர்களின் பார்வை அது!  

நெருக்கடி மிகுந்த இந்தத் தெருவில் உள்ள சில கட்டடங் களில் முறையான அனுமதி பெறாமல் நிறையத் தளங்கள்  கட்டப்பட்டு இருக்கின்றன. இவற்றில் ஒரு சின்ன தீவிபத்து நடந்தால்கூட மக்கள் வெளியேற வழி கிடையாது. நெரிசலில் சிக்கிக்கூட அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எந்தக் கட்டடத்திலும் பார்க்கிங் வசதி கிடையாது. சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் 64 கட்டடங் களுக்கு சீல் வைத்து இழுத்து மூடிவிட்டன. வணிகத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டது பெரு நிறுவனங்களின் முதலாளிகளைக் கவலையில் ஆழ்த்த... ஜவுளிக் கடைத் தொழிலாளர்கள், டெய்லர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர் பிழைப்பே பறிபோன பதற்றத்தில் இருக்கிறார்கள். ''இதனால் 20,000 தொழிலா ளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்'' என்கிறார் வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன்.

ரெங்கநாதன் தெருவா இது?!

பரபரப்பாகவே பார்த்துப் பழக்கப்பட்ட ரெங்கநாதன் தெருவுக்குள் ஆட்டோவோ காரோ... ஏன், ஒரு பைக்கூடச் செல்ல முடியாது. ஆனால் இன்று... ''என் இத்தனை வருஷ அனுபவத்துல பகல் 11 மணிக்கு இந்தத் தெருவுக்குள்ள ஒரு கார் போனதைப் பார்த்ததே இல்லை!'' என்று அங்கலாய்க்கும்  விஜயலட்சுமி, ''நான் பீஸ் புடிக்கிற வேலை பார்க்கிறேன். பீஸ் புடிக்கிறதுன்னா... சுடிதார் மெட்டீரியல் வாங்குறவங்களை கேன்வாஸ் பண்ணி டெய்லர் கடைக்கு அழைச்சுட்டுப் போற வேலை.. ஒரு பீஸ் புடிச்சுக் கொடுத்தா, பத்து ரூபா கிடைக்கும். ஒரு நாள் பூரா அலைஞ்சு திரிஞ்சா, இருநூறோ முந்நூறோ கிடைக்கும். ஆனா, அதுலயும் இப்போ மண்ணு விழுந்திருச்சு'' என்றார்.

சுடிதார்கள் தைத்துக்கொடுக்கும் தையல்காரர்கள் நிலைமை இன்னும் கொடுமை. அவர்கள் வேலை செய்துகொண்டு இருந்த கட்ட டத்துக்கு மொத்தமாக சீல் வைத்து   விட்டதால், 'இன்றாவது திறப்பார்களா?’ என்று ஒவ்வொரு நாளும் பூட்டிய கடை முன் வந்து நின்று ஏமாந்து திரும்புகிறார்கள்.

''எங்க குடும்பம் எல்லாம் இப்போ  நடுத்தெருவுல நிக்குது. ராத்திரி பகல் பார்க்காம தீபாவளிக்குச் சம்பாரிச்ச காசுல  ரெண்டாயிரம் ரூபா மிச்சம் இருக்கு. அது தீர்ற வரைக்கும் வண்டி ஓடும். அப்புறம் என்ன பண்றதுனு தெரியலை. வேற எங்கேயாவது வேலைக்குப் போகலாம்னா, சென்னை யில எல்லா ஏரியாவிலும் ஏற்கெனவே ஆளுங்க இருக்காங்களே. அப்புறம் இங்க கிடைக்குற வருமானம் அங்க கிடைக்காது. ஒரு சுடிதார் தைச்சா 25 ரூபா கிடைக்கும். முதலாளிகிட்ட நான் வாங்கின முப்பதாயிரத்தைக் கழிக்கிற வரை வேற எங்கயும் வேலைக்குப் போக முடியாது. போறதா இருந்தா, அந்தப் பணத்தை எண்ணிவெச்சுட்டுத்தான் போகணும். திடீர்னு அவ்வளவு பணத்துக்கு எங்கே போவோம் நாங்கள்லாம்?'' என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

ஜவுளிக் கடைகளில் வேலை பார்த்தவர் களின் கதி இன்னும் பரிதாபம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்தவர்கள். ஓரிரு நாட்களுக்கு அவர்களுக்கு உணவளித்த கடை முதலாளிகள், உடனடியாகப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படும் சாத்தியம் இல்லாததால், அவர்களை ஊருக்குக் கிளம்பச் சொல்லி விட்டார்கள். வருமானம் இழந்து எதிர் காலம் புரியாமல் விக்கித்துப்போய் இருக் கிறார்கள் அவர்கள். இப்படி வேலையையும் இழந்து, ஊருக்குப் போகும் மனமும் இல்லாமல் ரெங்கநாதன் தெருவிலேயே அலைந்துகொண்டு இருந்த ஓர் இளைஞ ரிடம் பேசினேன்.

''தங்கச்சிக்குக் கல்யாணம் வெச்சிருக்கு.  ஆனா, இப்போ என்ன செய்றதுன்னே தெரியலை. அம்மா நாலு வீட்டுக்குப் போய் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நான் தான் இனிமே நீ வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லி நிப்பாட்டினேன். இப்போ வேற வழி இல்லாம அவங்க திரும்ப வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலை. திரும்பவும் எங்களைக் கூப்பிடுவாங்களா?' - அவரது ஒவ்வொரு வார்த்தை களிலும் இயலாமையும் கழிவிரக்கமும். தன் கல்யாணத்துக்கு தானே பணம் சேர்க்கும் இளம் பெண்களும் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராகவும் இருக்கும் பெண்களுக்கும் வறுமை இப்போது இரட்டிப்பாகி இருக்கிறது.

பொதுவாகவே, ரெங்கநாதன் தெருவுக்கு வருபவர்களை நம்பியே உள்ள  நடைபாதை வியாபாரிகளின் வருமானத்திலும் இப்போது மண்!

ரெங்கநாதன் தெருவின் நடுவில் பேச்சுலர்களின் பேரடைஸாக இருக்கும்  'அன்னம்மாள் பில்டிங்’கில் தங்கி இருக்கும் புகழேந்தி, அன்றைய தின நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.

''அன்னைக்கு அதிகாலையில ஒரு நிமிஷம்கூட அவகாசம் கொடுக்கவில்லை போலீஸ். கட்டின கைலி, பனியனோட வெளியே துரத்திட்டாங்க. துணிமணி, சர்டிஃபிகேட், பாஸ்போர்ட், பணம்னு எதையும் எடுக்கவிடலை.  சீல் வெச்சுட்டுப் போயிட்டாங்க. பரீட்சை எழுதற ஹால் டிக்கெட்டைக்கூட எடுக்க முடியாம தவிச்சுப் போயிட்டான் என்  நண்பன். சில பசங்க ஊருக்குப் போயிட்டாங்க. பலர் கிடைச்ச  இடத்துல ஒண்டிக்கிட்டு இருக்காங்க. ஏதோ குற்றவாளிகளை விரட்டுற மாதிரி எங்களை போலீஸ் விரட்டி அடிச்சதை எப்பவும் மறக்க முடியாதுங்க!'' - ஆற்றாமையுடன் புகழேந்தி சொல்வதை ஆமோதிப்பதுபோல காற்றில் அசைந்தாடின மாடிக் கொடியில் காய்ந்துகொண்டு இருந்த, சேகரிக்கப்படாத அவர்களின் துணிகள்!

கடை முதலாளிகளின் கவனமோ, குறைந்துவிட்ட லாபத்தில் இருக்கிறது. அரசின் கவனமோ, பொது நல வழக்கின் நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதில் இருக்கிறது. ஆனால், உதிரித் தொழிலாளிகளின் கவனமோ அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வது என்பதில் இருக்கிறது!

ரெங்கநாதன் தெருவா இது?!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு