Published:Updated:

உலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல!

ரீ.சிவக்குமார், படம் : சு.குமரேசன்

உலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல!

ரீ.சிவக்குமார், படம் : சு.குமரேசன்

Published:Updated:
##~##

மிழின் முக்கியமான கட்டுரையாளர்களில் ஒருவர் தியோடர் பாஸ்கரன். சினிமா, சுற்றுச்சூழல் தொடர்பாக அவர் எழுதும் கட்டுரைகள், நாம் அறியாத நம்முடைய மரபார்ந்த வளங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுபவை. தியோடர் பாஸ்கரனுடன் கொஞ்சம் விரிவாகப் பேசலாமா?

 ''தொடர்ந்து தமிழ் சினிமாபற்றி எழுதிவருபவர் நீங்கள். இதுவரையிலான சினிமா ரசனையில் தமிழர்களிடம் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பெரிதாக மாறவில்லை. ஆட்டம் பாட்டத்தை ரசிக்கும் மனநிலைதான் ரசனை என்று தமிழகத்தில் தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. மலையாள, வங்காள சினிமாக்கள் சினிமாவுக்கான இலக்கணத்தை விரிவுசெய்கின்றன. ஆனால், தமிழிலோ நடிகர்கள், இயக்குநர் கள் போன்ற தனிநபர்களைப் பற்றி எழுதுவதுதான் சினிமா ரசனையாக மேலோங்கி இருக்கிறது. தமிழர்களின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து அரசியல் வரை பல தளங்களில் பாதித்து இருக்கிறது தமிழ் சினிமா. ஆனால், அந்த அளவுக்கு சினிமாவின் அழகியல் முக்கியமாகப் பார்க்கப்படுவது இல்லை. பள்ளி, கல்லூரிகளில் சினிமா ரசனை பாடமாக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஒருபுறம் சினிமாவுக்குத் தமிழர்கள் தங்கள் வாழ்க் கையில் பெரிய இடத்தைக் கொடுத்தாலும், இன்னொரு புறம்

உலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல!

சினிமா என்றாலே கெட்டது என்று நினைக்கும் தவறான மனப்போக்கும் இருக்கிறது.வெளிநாட்டு நூலகங்களில் டி.வி.டி-க்களுக்கும் இடம் உண்டு. தமிழ் நாட்டு நூலகங்களில் டி.வி.டி-க்களும் இல்லை; சினிமா சார்ந்த புத்தகங்களும் அதிகமாக இல்லை!''

''ரசனைபற்றிப் பேசுவதால் கேட்கிறேன்... எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து விஜய், விஜயகாந்த் காலம் வரைக்கும் தமிழகத்தில் ரசிகர் மன்றங்கள்    குறிப்பிடத்தக்க சக்தியாக உருவாவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''ரசனைக்கும் தமிழ்நாட்டு ரசிகர் மன்றங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. தனி நபர்களைப் போற்றுவது, துதிபாடுவது என்பதாகத்தான் ரசிகர் மன்றங்கள் இருக் கின்றனவே தவிர, உண்மையான சினிமா ரசனை வேறு. சினிமா ரசனை குறைவாக இருப்பதற்கும் ரசிகர் மன்றங்கள் அதிகரிப்ப தற்கும் இடையில் தொடர்பு இருக்கிறது. 'மனிதன் கண்டுபிடித்த கலைகளில் மகத் தானது சினிமா’ என்றார் லெனின். ஆனால், அது தமிழகத்தில் முற்றிலும் நேர்மாறான நிலையில் உள்ளது. இருப்பினும், 'எங்கேயும் எப்போதும்’ மாதிரியான படங்களின் வெற்றி நம்முடைய சினிமா ரசனையின் முன்னேற்றத்துக்கு ஒரு நல்ல அறிகுறி!''

''இப்போது நிறைய இளைஞர்கள் குறும்படங்களை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது குறித்து?''

''மிக நல்ல முயற்சி. ஆனால், கையில் பேனா இருக்கிறது என்பதற்காகக் கவிதை எழுதுவதுபோல, குறைந்த வாடகையில் கேமரா கிடைக்கிறது என்பதற்காகக் குறும் படங்கள் எடுக்கக் கூடாது. பல குறும்பட விழாக்களுக்குப் போகும்போது, 10 படங் களில் ஒன்றுதான் தேறுகிறது. செந்தமிழனின் 'ஆடோடிகள்’ தமிழின் மிக முக்கியமான குறும்படம். அப்படிப்பட்ட பின்புல ஆய்வும் விரிவான கருத்துக் களமும் ஒரு குறும்படத்துக்குத் தேவை. அமெரிக்காவில் புவி வெப்பமயமாதலுக்கு எதிராக அல் கோரால் எடுக்கப்பட்ட 'அன் இன்கன்வீனியன்ட் ட்ரூத்’ ( An inconvenient truth) குறும்படம் அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. தமிழ்க் குறும்பட இயக்குநர்களுக்கு இன்னும் விரிவான வாசிப்பும் சிரத்தையும் தேவை!''

''உலக சினிமாக்களைப் பார்க்கும் பழக்கம் தமிழில் அதிகரித்து இருக்கிறதே?''

''நல்ல விஷயம். ஆனால், உலக சினிமாக்களைப் பார்த்து காப்பியடித்துப் படம் எடுப்பது அதன் மோசமான விளைவு. உண்மையில் உலக சினிமாவைப் பார்ப்பதற்கே ஒரு புரிதல் தேவை. ஒரு சினிமாவைப் பார்ப்பதற்கு வெறுமனே திறந்த கண்கள் மட்டும் போதாது. அவற்றை நுட்பமாகப் பார்க்க வேண்டும். கதை இருந்தால்தான் படம் என்கிற மனோபாவம் மாறினால்தான், நம்மால் உலக சினிமாவைப் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் முடியும்!''

''சினிமாக்களை ஆவணப்படுத்துவதில் தமிழர்கள் எப்படி?''

''மிக மோசம்! நல்ல சினிமாக்களை மட்டும் ஆவணப்படுத்தினால் போதாது. மோசமான சினிமாக்களையும் சேர்த்து ஆவணப்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் ரசனை, கலாசாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். வெறுமனே தாஜ்மகாலும் தஞ்சாவூர் ஓவியங்களும் மட்டுமே நம் பாரம்பரியம் இல்லை. 'உதிரிப்பூக்கள்’, 'அவள் அப்படித்தான்’, 'யாருக்காக அழுதான்’ இவையும் நம் பாரம்பரியம்தான். ஆனால், சினிமாவின் மூலமே உருவான, ஆட்சியாளர்கள் சினிமாவை ஆவணப்படுத்துவதில் எந்தக் கவனமும் செலுத்துவது இல்லை. வெறுமனே சினிமாக்கள் மட்டும் அல்லாமல் பாட்டுப் புத்தகங்கள், சினிமா புகைப்படங் கள் போன்ற சினிமா சார்ந்த ஆவணங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இன்னொரு விஷயம், இப்படி முறையாக ஆவணப் படுத்தப்படாததால் பல தவறான தகவல்கள் வரலாறு ஆகிவிடுகின்றன. உதாரணத்துக்கு, கல்கியின் 'தியாக பூமி’ பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டதாகப் பலரும் எழுதி இருக்கிறார்கள். ஆனால், அது ராஜாஜி ஆட்சிக் காலம். 'தியாக பூமி’ தடை செய்யப்படவே இல்லை. சினிமா தொழிலா ளர்களுக்கான தொழிற் சங்கத்தை உருவாக்கிய எம்.பி.சீனிவாசன் மாதிரியான பல முன்னோடிகளை மறந்துவிட்டோம். நம்மை நாம் அறிய, அடுத்த தலைமுறைக்கு நம்மை உணர்த்த இத்தகைய ஆவணப்படுத்துதல்கள் அவசியம்!''

உலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல!

''காடுகளை நேசிப்பதை வலியுறுத்தும் நீங்கள் 'பேராண்மை’, 'மைனா’, 'கும்கி’ என்று காட்டுக்குள் எடுக்கப்படும் சினிமாக்கள் குறித்து என்ன நினைக் கிறீர்கள்?''

''அவர்களைக் காட்டுக்கு அருகிலேயேவிடக் கூடாது. படப்பிடிப்பு என்ற பெயரில் ஏற்படும் இரைச்சல்களும் மற்ற சீர்கேடுகளும் காட்டு விலங்குகளுக்குத் தொந்தரவாக இருக்கும். எல்லாக் காடுகளையும் அழித்துவிட்டு, இப்போது இருக்கும் கை அகலக் காட்டையும் குலைத்தால் எப்படி? காடுகளில் வெறுமனே பெரிய மிருகங்கள் மட்டும் இல்லை. ஏராளமான சிற்றுயிர்கள் உண்டு. ஒரு முயலுக்குப் பிரசவம் நடக்கும்போது பேரிரைச்சல் கேட்டால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். ஆஸ்திரேலியாவில் காடுகளுக் குள் சாலைகளே கிடையாது. காடுகள் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள். படப்பிடிப்பு என்ற பெயரில் சாப்பிட்ட குப்பைகளைப் போடுவதில் இருந்து பல வகையான சீர்கேடுகளை ஏற்படுத்தி அதை அழித்துவிடக் கூடாது!''

''கூடங்குளம் அணு உலை போன்ற பெரிய அளவிலான சுற்றுச்சூழல் சீர்கேடுகளே நம் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆனால், நம்மால் கவனிக்கப்படாத சுற்றுச்சூழல் பிரச்னைகள் என்னென்ன?''

''தொழிற்புரட்சிக்குப் பிறகு நாம் செய்த சூழலியல் தவறுகளின் விளைவுதான் காலநிலை மாற்றம். அணு ஆயுதப் போரை விட இது ஆபத்தானது. அடுத்து நீர் மாசுபடுதலும் நாம் சந்திக்கும், சந்திக்கவிருக்கும் மிக முக்கியமான பிரச்னை. உலகில் மொத்த நீர்ப்பரப்பில் வெறுமனே 2.5 சதவிகித நீர்தான் நன்னீர். அதையும் மாசுபடுத்தினால் எப்படி? பெங்களூரில் ஒரு அபார்ட்மென்டில் 37 ஃப்ளாட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஃப்ளாட்டும் ஒன்றரைக் கோடி. ஒரு ஃப்ளாட்டுக்கு மூன்று கார் பார்க்கிங். 10 கார்களில் 8 கார்களில் ஒரே ஒருவர்தான் பயணம் செய்வார். எவ்வளவு பெட்ரோல் பயன்பாடு? எத்தனை சுற்றுச்சூழல் சீர்கேடு? யோசித்துப்பாருங்கள். பணக்காரர்கள் இந்த இயற்கையை அழிப்பதால், பூமியைச் சுரண்டுவதால் பாதிக்கப்படுவது என்னவோ ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள்தான். ஆனால், இதுமாதிரியான பிரச்னைகளுக்கு அரசுகள் முன்னுரிமை அளிப்பது இல்லை. மணல் கொள்ளையை வெறுமனே அரசியல் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், மணல் கொள்ளை என்பது நதிக்கு அளிக்கப்படும் மரண தண்டனை. பள்ளிகளில் சூழலியல் கல்வி என்று பாடங்கள் உண்டு. ஆனால், அவற்றில் ஒரு விஷயமும் இல்லை. நாம், இயற்கையைப் பற்றிக் கவலைப்படாவிட்டால், இயற்கை நம் அழிவைப் பற்றிக் கவலைப்படாது!''

''கடந்த ஆண்டு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாக இந்திய அரசு அறிவித்ததே? இது சூழலியலில் நல்ல முன்னேற்றம்தானே?''

''உண்மைதான். புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. முன்பு புலிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக் கெடுப்பதில் குறைபாடுகள் இருந்தன. காலடித் தடங்களை வைத்து புலிகளைக் கணக்கிட்டார்கள். ஒரே புலியின் காலடித்தடத்தை இரண்டாவது முறையும் கணக்கெடுத்துவிடும் தவறு நிகழ வாய்ப்பு உண்டு. ஆனால், இப்போது தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகளின் வரிகளை வைத்துக் கணக்கெடுக்கிறார்கள். புலிகளின் உடலில் உள்ள வரிகள் நம் கைரேகைகள் போல. ஒவ்வொரு புலிக்கும் இவை மாறு படும். எனவே, புலிகளைக் கணக்கிடுவது ஓரளவுக்குத் துல்லியமாக இருக்கும். குறிப்பாக தமிழ்நாட்டில், சத்தியமங்கலம் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. ஆனால், ஒரு புலி வாழ்வதற்கு 40 சதுர கி.மீ. காடு தேவை. காட்டின் பரப்பு குறைந்தால் புலிகள் அழிந்துவிடும்!''

''உயிரியல் பூங்காக்கள் எந்த அளவில் பராமரிக்கப்படுகின்றன?'

''முன்பு இருந்ததைவிட இப்போது முன்னேறியுள்ள நிலை. ஆனால், 'விலங்குகள் காட்டில்தான் இருக்க வேண்டும்.உயிரியல் பூங்காக்களே கூடாது’ என்ற கருத்தும் வலுப்பட்டுவருகிறது. எப்படி இருந்தபோதும் உயிரியல் பூங்காக்களிலும் முடிந்தவரை இயற்கையான சூழலில் வாழ விலங்குகள் அனுமதிக்கப்பட வேண்டும், குறிப்பாக அவை இனப்பெருக்கம் செய்வதற்கான சூழல் வேண்டும். இப்போது இந்தியக் காடுகளில் விலங்குகள் அருகிவருகின்றன. குஜராத்தில் ஒரு சின்ன காட்டுக்குள் 600 சிங்கங்கள் வாழ்கின்றன. சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்படும் சோலைமந்திகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு நாட்டு மருந்துகளுக்காக அவை அழிக்கப்பட்டதும் ஒரு காரணம். முன்பெல்லாம் மாலை நேரத்தில் வானத்தைப் பார்த்தால் கூட்டம் கூட்டமாகப் பறவைகள் கூடு அடைய பறப்பதைப் பார்க்கலாம். இப்போதெல்லாம் அப்படி பறவைகளைப் பார்க்க முடிவது இல்லை. முன்பு பறவை கள் இல்லாத நீர்நிலைகளைப் பார்ப்பதே அரிது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றால் விலங்குகளும் பறவைகளும் அழிந்துவருவது பெரும் துயரம்!''

''சிற்றுயிர்களின் அவசியம்பற்றித் தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். அவற்றின் முக்கியத்துவம்பற்றிக் கூறுங்களேன்?''

''சிற்றுயிர்கள்தான் நம் வாழ்க்கையைச் சமநிலைப்படுத்துகின்றன. தேனீக்கள்தான் காட்டை விரிவு செய்கின்றன. தேனீக்கள் இல்லை என்றால் மகரந்தச்சேர்க்கையும் கிடையாது; காடுகளும் இல்லை. இத்தகைய சிற்றுயிர்கள் அழிந்துவிட்டால், இயற்கை யின் பிணைப்பு அறுந்துவிடும். இயற்கையில் எங்கே தட்டினாலும் இன்னொரு பக்கம் அதிரும். உதாரணமாக, தலைப்பிரட்டையின் முக்கிய உணவு கொசு முட்டை. ஆனால், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் தலைப்பிரட்டைகள் அழிகின்றன. தலைப்பிரட்டைகள் அழிவதால் கொசுக்கள் அதிகரிக்கின்றன. நாமோ கொசுக்களை அழிப்பதற்கு கொசு மருந்து அடித்து, மலேரியாபற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த உலகம் வெறுமனே மனிதர்களுக்கு மட்டும் ஆனது இல்லை. பூச்சிகள், புழுக்கள், பாம்புகள் என எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism