வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (02/06/2018)

கடைசி தொடர்பு:20:40 (02/06/2018)

நார்வே, சுவிட்சர்லாந்திலும் காலாவுக்குத் தடை..?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நார்வே மற்றும் சுவிஸ் நாட்டில் காலா படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 

காலா

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் மே 30-ம் தேதி தூத்துக்குடி சென்றார். பாதிப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், `மக்கள் போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்ததே கலவரத்துக்குக் காரணம். காவல்துறையினரைத் தாக்கியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

`கலவரக்காரர்களை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்' என்று தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்தக் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் கூறிய கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து அவருடைய 'காலா படத்தை நார்வேயில் திரையிடமாட்டோம்' என்று நார்வே தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர் குழு தெரிவித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, தமிழர்கள் அதிகம் வசிக்கும் சுவிட்சர்லாந்திலும் காலா படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்கபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.