வெளியிடப்பட்ட நேரம்: 05:53 (07/06/2018)

கடைசி தொடர்பு:15:00 (07/06/2018)

ரஜினியின் 'காலா' திரைப்படம் வெளியானது; ரசிகர்கள் ஆடிப்பாடி உற்சாகம்!

ரஜினி-யின் காலா வெளியீடு

ரஜினிகாந்த் நடித்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான 'காலா' இன்று தமிழகமெங்கும் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினியின் 'கபாலி' படத்தை இயக்கிய பா.இரஞ்சித், காலா படத்தையும் இயக்கியுள்ளதால், ரஜினி ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையின் முக்கியப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் 'காலா' படத்தின் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன. ஆயிரக்கணக்கான ரஜினிமன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் திரையரங்கின் முன் திரண்டு, காட்சி தொடங்குவதற்கு முன்பாக நடனமாடிக் கொண்டாடினார்கள். திருவிழா போன்று திரையரங்குகளின் முன் திரண்ட ரசிகர்கள், ரஜினி கட்-அவுட்டுக்கு பூஜைகள் செய்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல திரையரங்குகளின் முன் நள்ளிரவிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டுவந்து, காலா படத்தைக் காணும் முன் மேள, தாளம் முழங்க கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

'அரசியலுக்கு வருவது உறுதி' என்று ரஜினிகாந்த் அறிவித்தபின்னர் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதாலும், நெல்லை மாவட்டத்தில் இருந்து மும்பையில் குடிபெயர்ந்த 'தாதா'-வை குறித்த கதையம்சத்துடன் வெளிவந்துள்ள படம் என்பதாலும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தவிர, ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கான பல்வேறு சாட்டையடி வசனங்களும் இடம்பெற்றிருக்கும் என்பதால், 'காலா' திரைப்படம் அவரின் ரசிகர்களிடையே அதிகப்படியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. 

(வீடியோவைக் காண....)
காலா விமர்சனம் இங்கே