Published:Updated:

முத்துலட்சுமிய நல்லா பாத்துக்கணும்!

என்.சுவாமிநாதன்படங்கள் : ரா.ராம்குமார்

முத்துலட்சுமிய நல்லா பாத்துக்கணும்!

என்.சுவாமிநாதன்படங்கள் : ரா.ராம்குமார்

Published:Updated:
##~##

மாப்பிள்ளை மூன்றடி... மணப்பெண் அவரைவிடக் கொஞ்சம் உயரம் குறைவு. மீசை முளைக்காத, குழந்தைத்தனம் மாறாத முகம் மாப்பிள்ளைக்கு. 'சாப்டீங்களா?’ என்று கேட்டால்கூட முகம் மலர்ந்து வெட்கத்தில் சிவக்கும் கூச்சம் பெண்ணிடம். நாகர்கோவில் அருகில் உள்ள தெங்கம்புதூரைச் சேர்ந்த 27 வயது மணிகண்டன், தூத்துக்குடி கே.வி.கே. நகரைச் சேர்ந்த 26 வயது முத்துலட்சுமி ஆகியோரின் திருமணத்தைப் பற்றித்தான் மாவட்டமே கதைத்துக்கொண்டு இருக்கிறது!

 இந்தத் திருமணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான செய்தியும் ஒளிந்திருக்கிறது. அதை மணிகண்டன் சொல்லக் கேட்போம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முத்துலட்சுமிய நல்லா பாத்துக்கணும்!

''சின்ன வயசுல எல்லாரையும்போலத்தான் இருந்தேன். வீட்ல ரொம்பக் கஷ்டம். அஞ்சாப்புக்கு மேல படிக்க முடியலை. கூடப்பிறந்த ரெண்டு பேரு நல்லா உயரமாத்தான் வளர்ந்தாங்க. நமக்குத்தான் 14 வயசோட வளர்ச்சி நின்னுருச்சு. என் வயசுப் பசங்க சைக்கிள், பைக் ஓட்டும்போது ஆசையா இருக்கும். ஆனா, மனசைத் தேத்திக்குறதைத் தவிர வேற வழி இல்லை. சென்னையில் ஒரு மளிகைக் கடையில வேலை பார்த்துட்டு இருந்தப்ப,  உயரமான இடத்துல இருந்த ஒரு பொருளை என்னால எடுக்க முடியலை. முதலாளி எதுவும் சொல்லலை. ஆனா, சங்கடமா இருந்ததால நானே நின்னுட்டேன். உள்ளூர்லயே வெல்டிங் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தேன். வெல்டிங் வெளிச்சம் கண் எரிச்சலை உண்டாக்குச்சு. அந்த வேலைக்கும் போக முடியலை. உடம்பை வருத்தி வேலை பார்க்குற சக்தி இல்லை. எப்படி வாழுறதுனு ரொம்பக் கவலையா இருந்தது.  

இருக்குற பிரச்னை போதாதுனு ஒரு பொண்ணைக் காதலிக்க வேற ஆரம்பிச்சுட்டேன். அவங்க நல்லா செகப்பு, ரொம்ப அழகு, உயரமாவும் இருப்பாங்க. நம்ப மாட்டீங்க... அவங்களும் என்னைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு தடவை ஊர் திருவிழாவில் ரெண்டு பேரும் ஜோடியா சுத்தினது தப்பாப்போச்சு. அப்போ அவங்களுக்கு நான் பொட்டு, பாசி, வளையல்னு வாங்கிக்கொடுத்ததைப் பார்த்து, யாரோ அவங்க வீட்ல வத்திவெச்சுட்டாங்க. 'இந்தக் குள்ளனையா காதலிக்குற’னு பிரச்னை பண்ணி, எங்களைப் பிரிச்சுட்டாங்க.

அந்த வேதனையில் இருக்கும்போதுதான் 'அற்புதத் தீவு’ படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. அப்படியே சில சீரியல்களிலும் நடிக்கச் சொல்லிக் கேட்டாங்க. ஆனா, மனசு முழுக்க வலியை வெச்சுட்டு எப்படி கேமரா முன்னாடி சிரிக்குறது? அதனால வேண்டாம்னு சொல்லிட்டேன். எந்தப் பக்கம் போனாலும் முட்டுச்சந்தா இருந்தா என்னதான் பண்ண முடியும்?

'இதுக்கு மேலயும் நாம வாழணுமா’னு தோண ஆரம்பிச்சிருச்சு. அப்போதான் ஊர்ல இருக்குற சின்னப் பசங்களோட செட் சேர்ந்தேன். அவங்ககிட்ட வயசைக் காட்டிக்காம திருடன்- போலீஸ், கிட்டிப்புள், நொண்டி விளையாட்டு, எறிபந்து, ஐஸ் பால்னு விளையாடினேன் அவங்க சந்தோஷத்துக்காக வேணும்னே தோத்துப்போவேன். என் உயரம், என்  முகம், நான் அடிக்கடி தோத்துப்போறதுலாம் அவங்களுக்குப் பிடிச்சுருச்சுபோல. என்னை ரசிச்சு சிரிச்சு ஃப்ரெண்ட் ஆக்கிட்டாங்க. 'சரி, ஒவ்வொருத்தர் வாழ்றதுக்கும் ஒரு அர்த்தம் இருக்குபோல’னு அப்போதான் புரிஞ்சுக்கிட்டேன்.

முத்துலட்சுமிய நல்லா பாத்துக்கணும்!

என் செட் நண்பர்கள் எப்பவும் என் கூடவே இருந்தாங்க. நிறைய நம்பிக்கை கொடுத்தாங்க. எனக்குச் சங்கடம் வரக் கூடாதுன்னே சின்னச் சின்ன வேலைகள் கொடுத்துச் சம்பளம் கொடுத்தாங்க. இவ்வளவு நல்ல நண்பர்கள் இருக்கும்போது எதுக்குப் பயப்படணும்னு தைரியம் வந்துச்சு. தனிக்கட்டையா வாழ்ந்திரலாம்னு முடிவு பண்னேன். அப்போதான் எனக்கு பொண்ணு பார்க்கப் போறோம்னு வீட்ல அடுத்த அதிர்ச்சியைக் கிளப்புனாங்க. திரும்பவும் அவமானப்படணுமானு நான் தயங்கினேன். அப்பதான் முத்துலட்சுமிபத்தி தகவல் வந்தது. போய்ப் பார்த்தேன். நமக்கே நமக்கான ஒரு பொண்ணுனு தோணுச்சு.  'என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமா’னு கேட்டேன். அவங்களும் என்னைப் போல வெளியே போகச் சங்கடப்பட்டுக்கிட்டு பல வருஷமா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்திருக்காங்க.

முத்துலட்சுமிய நல்லா பாத்துக்கணும்!

என்னையும் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. உடனே சம்மதிச்சிட்டாங்க. இப்போ என்னைப் பார்த்துக்க முத்துலட்சுமி வந்துட்டாங்க. அவங்களைப் பார்த்துக்க நான் இருக்கேன். என் எல்லாக் கஷ்டங்களுக்கும் விடிவுக்காலம் பொறந்த மாதிரி இருக்கு.

இப்போ கிடைச்ச வேலையைப் பார்த்துட்டு இருக்கேன். எனக்கு என்ன வேலை செட் ஆகும்னு தேடணும். நிறைய சம்பாதிக்கணும். முத்துலட்சுமி கேட்டதெல்லாம் வாங்கித் தரணும். இனிமே சந்தோஷமா இருப்பேன் சார்!''

மணிகண்டன் பேசி முடிக்க, கலங்கிய கண்களோடு அவரது தோளில் சாய்ந்துகொள்கிறார் முத்துலட்சுமி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism