வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (12/06/2018)

கடைசி தொடர்பு:16:07 (12/06/2018)

`` `காதல் ஓவியம்' பாடுனது நீங்களா'னு இப்பவும் ஆச்சர்யமா கேட்கிறாங்க!’’ - பாடகி ஜென்ஸி நெகிழ்ச்சி

ந்தியா முழுக்க இந்தித் திரைப்படப் பாடல்கள் கோலோச்சிய காலகட்டத்தில், அனைவரையும் நாட்டின் தென் திசைநோக்கி திரும்பிப் பார்க்கவைத்தவர், இசைஞானி இளையராஜா. தமிழ் மண் மணத்தை உலகம் முழுக்க இசையாகக் கொண்டுசேர்த்த இசைக் கலைஞர். காதல், மகிழ்ச்சி, உற்சாகம், தன்னம்பிக்கை, சோகம், காதல் தோல்வி என அனைத்துவித உணர்வுகளையும் இளையராஜாவின் கரம்பிடித்தே கடக்கின்றனர் இசை ரசிகர்கள். இன்றைக்கும் நெடுந்தொலைவு பயணத்துக்குத் தயாராகும் ஒவ்வொருவரும் மறக்காமல் எடுத்துக்கொள்வது, இவரின் இசைப் பாடல்களின் தொகுப்பையே. அந்தத் தொகுப்பில், ஜென்ஸி பாடிய ஒரு பாடலாவது நிச்சயம் இடம்பிடித்துவிடும்.

ஜென்ஸி

அப்போதைய பெண் பாடகர்களில் ரொம்பவும் தனித்துவமான குரல் ஜென்ஸியுடையது. `அடி பெண்ணே...', `காதல் ஓவியம்...', `தெய்விக ராகம்...', `என் வானிலே...' என அவரின் ஹிட் பாடல்களின் பட்டியல் நீளமானது. அப்போதைய ஆர்கெஸ்ட்ராக்களில் ஜென்ஸியின் பாடல்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஆனால், 1978 - 82 இந்த இடைப்பட்ட குறுகிய ஆண்டுகாலமே அவரின் திரையிசைப் பயணம் அமைந்தது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியிருந்தபோது அவை காலத்தால் மறக்கடிக்க முடியாதவை. தற்போது கேரளாவில் வசித்துவரும் பாடகி ஜென்ஸியுடன் ஓர் உரையாடல்.

``திரை இசையில் பாடும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?"

``ஜேசுதாஸ் அண்ணாதான் ராஜா சார்கிட்ட அழைச்சுட்டு போனாங்க. மூணு பாடல்களைப் பாடினேன். `குரல் நல்லா இருக்கு'னு ஓகே சொல்லிட்டாங்க. `திரிபுரச் சுந்தரி' படத்தில், `வானத்துப் பூக்கள்' என்ற பாடலைப் பாடும் வாய்ப்பு தந்தாங்க. அப்புறம், `முள்ளும் மலரும்', `ஜானி', `அலைகள் ஓய்வதில்லை' எனப் பல படங்களில் வாய்ப்பு கிடைச்சது"

``உங்களுக்குத் தமிழ்ப் படிக்கத் தெரியுமா?"

``இப்போ படிக்கவும் எழுதவும் தெரியும். ஆனால், அப்போ படிக்கவோ, எழுதவோ வராது. ராஜா சார் சொல்றதை மலையாளத்தில் எழுதிவெச்சுப் பாடுவேன். முதலில், ஹார்மோனியத்தில் மியூஸிக் பண்ணிகிட்டே பாட்டைப் பாடிக் காட்டுவார். இது என் வாழ்க்கையில் பெரும் பாக்கியம். அவர் பாடுவதைக் கேட்டே பாடிடுவேன். ஆனால், அது ஓகேவா இல்லையான்னு தெரிஞ்சுக்கிறதுதான் கஷ்டமான விஷயம். ராஜா சாருக்குத் திருப்தியா வரலைன்னா, பாடியதைப் போட்டுக்காட்டி, `என்ன தப்புன்னு நீயே கண்டுபிடி?'னு சொல்வார். ராஜா சார்ன்னா எல்லோருக்குமே பயம், எனக்கும்தான். ஆனால், ஒரு தடவைகூட என்கிட்ட கடுமையாகப் பேசினதில்லே."

இளையராஜாவுடன்

``ரொம்பக் கஷ்டப்பட்டுப் பாடினது எந்தப் பாட்டு?"

``அப்போதெல்லாம் தனி ட்ராக் கிடையாது. ஆர்க்கெஸ்ட்ராவோடு சேர்ந்துதான் ரெக்கார்டு செய்யணும். அதனால், ஒவ்வொரு பாட்டுமே பெரிய சவால். `மெட்டி' படத்தில் வந்த, 'கல்யாணம் என்னை முடிக்க' பாடல், கல்யாணச் சூழலைச் சொல்லும். நாதஸ்வரம், தவில் என நிறைய இன்ட்ஸ்ருமென்ட்ஸ் இருந்ததால் பாடறதுக்கு அதிக நேரம் எடுத்துச்சு."

``அவர் உங்களைப் பாராட்டிய தருணங்கள்...''

``ராஜா சார், நேரடியாக அதிகம் சொல்ல மாட்டாங்க. சில பத்திரிகைகளில், நான் நல்லா பாடினதா சொல்லியிருக்கிறதைப் படிச்சிருக்கேன்."

``உங்களுடைய இசைப் பயணத்தில் இளையராஜாவின் இடம் எது?"

``அவர் மூலமே இந்தளவுக்கு எல்லோருக்குமே தெரியவந்தேன். இப்போ நீங்க என்கிட்ட பேசறதுக்கும் அவரே காரணம். அதுக்கு அவருக்குக் கோடி முறை நன்றி சொன்னாலும் தகும். நான் ரொம்பக் குறைவான எண்ணிக்கையில்தான் பாடியிருந்தாலும் அவை ஹிட்டாக அமைந்துடுச்சு. அதுக்கு, கடவுளுக்கும் ராஜா சாருக்கும் நன்றி சொல்லணும். இப்பவும் என்னைப் பார்க்கிறவங்க, `காதல் ஓவியம்' பாடினது நீங்கதானேன்னு கேட்கிறாங்க. அதைவிட வேற என்ன சந்தோஷம் வேணும். இன்னும் 50 வருஷம் கழிச்சும் அந்தப் பாடலை விரும்பிக் கேட்பாங்க."

 


டிரெண்டிங் @ விகடன்