வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (13/06/2018)

கடைசி தொடர்பு:19:58 (13/06/2018)

`கமலின் அரசியல் ஒரு குழப்ப அரசியல்!' - 'விஸ்வரூபம் 2' டிரெய்லர் குறித்து சுபகுணராஜன்

`கமலின் அரசியல் ஒரு குழப்ப அரசியல்!' - 'விஸ்வரூபம் 2' டிரெய்லர் குறித்து சுபகுணராஜன்

`சமூகவிரோதி', `தேசத்துரோகி' - இந்த இரண்டு வார்த்தைகள்தாம் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் சமீபத்திய டிரெண்ட். ரஜினிகாந்த் மூலம் `சமூகவிரோதி' என்ற வார்த்தை வைரலானதைப்போல, தற்போது கமலின் `விஸ்வரூபம் - 2' டிரெய்லர் மூலம் `தேசத்துரோகி' என்ற வார்த்தையும் வைரலாகியுள்ளது. 

விஸ்வரூபம்

``தமிழ்நாட்டில் எனது திரைப்படம் வெளியாகவில்லை என்றால், எங்கு என்னால் சுதந்திரமாகப் படம் எடுத்து வெளியிட முடிகிறதோ, அந்த நாட்டுக்குச் சென்றுவிடுகிறேன். `விஸ்வரூபம்' திரைப்படம் வெளியாகாதபட்சத்தில் நான் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை" - `விஸ்வரூபம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, நடிகர் கமல்ஹாசன் ஆதங்கத்தோடு கூறிய வார்த்தைகள் இவை. 

ஒருவழியாகத் திரைப்படம் வெளியானது. அதற்குப் பிறகும் படம் குறித்த சர்ச்சைகள் குவிந்தவண்ணமிருந்தன. திரைப்படத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும், இஸ்லாமியர்களைப் புண்படுத்தும்விதமாகவும் காட்சிகள் இருந்ததாக  வலைதளங்களில் விமர்சனம் செய்திருந்தார்கள்.

`விஸ்வரூபம்' திரைப்படம் வெளியானபோதே படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலும் வெளியானது. முதல் பாகம் வெளியானபோது கமல்ஹாசன் திரைத் துறையைச் சார்ந்தவராக மட்டுமே இருந்தார். தற்போது, அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயல்படுகிறார். அவர் கட்சி தொடங்கிய பிறகு வெளிவரும் டிரெய்லர் என்பதால், படம் பேசப்போகிற அரசியல் குறித்த எதிர்பார்ப்பும் இருந்தது. 

விஸ்வரூபம்

இதற்கிடையில் சமீபத்தில் வெளியான `விஸ்வரூபம் 2' டிரெய்லர் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பது கமல்ஹாசன்தான். `நாசர் பள்ளிக்கூடத்துக்குப் போகணும்; ஜலால் காலேஜுக்குப் போகணும். அதான் சரி' எனத் தொடங்குகிறது டிரெய்லர். 

தமிழ் டிரெய்லரில், `எந்த மதத்தையும் சார்ந்து இருக்கிறது பாவமில்ல பிரதர். ஆனா, தேசத்துரோகியா இருக்கிறது தப்பு' என வசனம் வருகிறது. இதே காட்சியில்  இந்தி டிரெய்லரில் `முஸ்லிமா இருக்கிறது தப்பில்ல. உன்னை மாதிரி மனுஷனா இருக்கிறதுதான் தப்பு' என வசனம் வருகிறது. இந்த இருவேறுபட்ட வசனங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெறுகிறது. 

இந்த டிரெய்லர் குறித்து திரைப்பட விமர்சகரும் எழுத்தாளருமான சுபகுணராஜனிடம் பேசினோம்...

விஸ்வரூபம்

``இந்த டிரெய்லர், கமலின் அரசியல் பயணம் குறித்த குழப்பமான மனநிலையைக் காட்டுவதாகவே உள்ளது. படத்தின் டிரெய்லர் என்பது, அந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பைத் தூண்டுவதற்காக வெளியிடுவது. அதற்காகத்தான் இந்த டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் எந்த மாதிரியான வசனங்கள் பேசப்படுகின்றன என்பதும் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று.

திரைப்படத்தில் இந்தக் காட்சி கதையோடு பொருந்தக்கூடிய, தனிப்பட்ட எவரையும் புண்படுத்தாத வகையில் காட்சிகளாக இருக்கலாம். ஆனால், டிரெய்லரில் ஒருவித சர்ச்சையாக வசனம் வைப்பது எப்படி நியாயமாகும்? அதுவும் மதம் குறித்த வசனம் வைக்கப்படும்போது அதை மிகக் கவனமாகக் கையாளவேண்டும். அதுவும் தேசியத்தில் நம்பிக்கைக்கொண்டவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் கமல், யாரை `தேசத்துரோகி' எனக் குறிப்பிடுகிறார்? எது தேசவிரோதம் எனக்  கமல் குறிப்பிடுகிறார்? என்பது கவனிக்கவேண்டியது.

நம் நாட்டில் ஒரு தரப்பினரால் தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், மற்றொரு தரப்பினரால் தலைவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அதுவும் தமிழ் டிரெய்லரில், `எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள், பாவமில்லை' என ஒரு வசனம் வருகிறது. இந்தி டிரெய்லரில் அது, `முஸ்லிமாக இருப்பதில் தவறில்லை' என மாறி வருகிறது. இதுவே ஒரு சிக்கல்தானே! இதை எப்படிச் சாதாரண டிரெய்லர் எனக் கடப்பது? இதைத்தான் குழப்ப மனநிலை என்கிறேன். நடிகராக மட்டுமல்லாமல், தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் உள்ள கமல், இதை யோசிக்காமலா வைத்திருப்பார். அதுவும் இந்தி என்று சென்றவுடன் எல்லா மதங்களும் என்பது முஸ்லிம் என மாறுவது சாதாரணமாகக் கடந்து போகக்கூடியதல்ல" எனத் தனது கருத்தைக் கூறினார்.

கலை, மக்களுக்கான ஒன்று. மக்களின் வாழ்வை மையப்படுத்திய படைப்பை அரசியலற்றது எனச் சொல்ல முடியாது. அறிமுக இயக்குநர்கள் இயக்கும் படங்களே, அரசியல் பார்வையோடு விமர்சிக்கப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் இயக்கி, நடித்துள்ள படத்தில் பேசப்படும் ஒவ்வொரு வசனமும் மக்களால் கூர்ந்து கவனிக்கப்படும். 50 வருடத்தை திரைத்துறையில் கடந்துள்ள கமல், கவனிக்காமலா இருந்திருப்பார்?


டிரெண்டிங் @ விகடன்