Published:Updated:

யார் கில்லர்?

கவின் மலர்

யார் கில்லர்?

கவின் மலர்

Published:Updated:
##~##

''இனி நான் பிராக்டீஸ் செய்யப்போவது இல்லை. வாழ்நாளில் ஓர் அற்புத வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இனி நான் ஒரே ஒருவருக்கு, உலகம் போற்றும் ஒருவருக்கு டாக்டராகப்போகிறேன்'' - மைக்கேல் ஜாக்சனுக்கு மருத்துவராகும் முன்பு டாக்டர் கான்ராட் முர்ரே அதுநாள் வரை தான் பார்த்துவந்த நோயாளிகளிடம் கூறிய வார்த்தைகள் இவை!

 இப்போது அதே முர்ரேதான் மைக்கேல் ஜாக்சனின் மரணத்துக்கு மறைமுகக் காரணம் என்று கூறி நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இறுதி நாளில் ஒரு தனி அறைக்குள் என்ன நடந்தது என்பதற்கான சாட்சிகள் இல்லை. ஜாக்சனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, 'புரோபோஃபோல்’ என்கிற மருந்தை அதிக அளவு உட்கொண்டதுதான் அவருடைய மரணத்துக்குக் காரணம் என்றதன் அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பு அமைந்துஉள்ளது.

யார் கில்லர்?

தீர்ப்பு வாசிக்கப்படும்போது முர்ரேயின் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை! மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்களை இந்தத் தீர்ப்பு ஒருவகையில் சமாதானப்படுத்தி இருக்கிறது.

புகழின் உச்சியில் இருக்கும் எவருக்கும் ஏற்படும் மன அழுத்தம் ஜாக்சனுக்கும் ஏற்பட்டது. அவர் செய்துகொண்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளை ஈடுசெய்ய மேலும் மேலும் மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்தார். ஆகவே, கடுமையான பக்கவிளைவுகளும் ஏற்பட்டன. அவருடைய இறுதி நாட்களில் அவர் வீட்டில் 'புரோபோஃபோல்’ மருந்து பாட்டில்கள் நிறையக் காணப்பட்டன. அனஸ்தீஸியா வகை மருந்தான அது, தற்காலிகமாக ஹிப்னாடிஸத்துக்கு ஆட்பட்ட உணர்வைக் கொடுக்கும்.  

''அவருடைய சிகிச்சைகள் குறித்த முழுமை யான வரலாறு எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் சொல்லவும் இல்லை. 'புரோபோ ஃபோல்’ மருந்தை அவருக்கு நான் பரிந் துரைக்கவில்லை. அவரை நான் முதன்முதலில் சந்தித்தபோதே அந்த மருந்தை அவர் உட்கொள்பவராக இருந்தார். நான் மட்டுமே அவருக்கு மருந்துகள் தருபவனாக இல்லை. அவர் யார் யாரிடம் எல்லாம் சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்று எனக்குத் தெரியாது. அப்படி அவர் இன்னொரு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டால், நான் தடுக்கவும் முடியாது. அன்றைக்கு நான் மிகச் சிறிய அளவில்தான் 'புரோபோஃபோல்’ மருந் தைத் தந்தேன். ஆனால், ஒருவேளை நான் அறையைவிட்டு வெளியேறிய பின் அவர் அதிகமாக உட்கொண்டு இருக்கலாம். எல்லோரையும்போல் நானும் அவருடைய விசிறி. நான் அவரை மிகவும் நேசித்தேன். அவர் மரணத்துக்கு நான் காரணம் என்ற குற்றச்சாட்டை என்னால் எளிதில் கடந்து செல்ல முடியவில்லை!'' என்று முர்ரே முன்னரே தெரிவித்து இருந்தார்.

அறுவைச் சிகிச்சை அறையில் மருத்துவர்கள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகளின் கண்காணிப்பில்தான் நோயாளிக்கு 'புரோபோஃபோல்’ மருந்து தரப்படும். ஏனெனில், இந்த மருந்தை உட்கொண்ட நோயாளிகள் மயக்க நிலையை அடைந்துவிடுவார்கள். கொஞ்சம் அதிகமானாலும்கூட மூச்சு நின்றுவிடும் அபாயம் உண்டு. இந்த மருந்தைத்தான் முர்ரே அவருக்குத் தந்திருக்கிறார்.

யார் கில்லர்?

இறுதிக் காலத்தில் ஜாக்சனின் மனம் அதீத துன்பத்தில் உழன்று இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலக நாடுகள் முழுக்கப் பயணித்து 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டார் மைக். அவரது இந்த ஆர்வத்துக்கு கலைத் தாகம் மட்டும் காரணம் அல்ல... அவரை அழுத்திய கடன் சுமையும்தான். 50 இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு அவரை நெருக்கிய ஸ்பான்சர்களின் நிர்பந்தங்கள், பலவீனமாகிக்கொண்டே இருந்த உடல்நிலையைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஒருபுறம், மேடையில் அவருடைய 50 வயது சோர்வைத் தெரியாமல் சமாளிக்க வேண்டிய மன அழுத்தம், ஊடகங்களின் துரத்தல் படலம், நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் என ஏராளமான நெருக்கடிகளுக்கு இடையில் மைக் தனது இறுதி நாட்களைக் கழிக்க வேண்டி இருந்தது.

மைக் தன் பால்யத்தில் தந்தையால் கடு¬மயான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வளர்ந்தவர். சிறிய வயதிலேயே இசை, நடனம் ஆகியவற்றை மிகச் சிரத்தையாகக் கற்றுக்கொண்ட மைக், அதற்குக் கொடுத்த விலை அவரது பால்யம். ஒரு குழந்தை அனுபவிக்க வேண்டிய எந்தச் சந்தோஷத்தையும் அனுபவிக்காமல்தான், ஜாக்சன் வளர்ந்தார். ஒரு நட்சத்திரமானதும் தனது புகழுக்கு அவர் கொடுத்த விலை அவரது தனிப்பட்ட சுதந்திரம்!

அவரது உடலும் குரலும் அவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அவருடைய ரசிகர்கள் அவற்றைத் தங்களுடையதாக நினைத்தார்கள். அவருடைய உடல் நலம் குறித்து கவலைகொள்ளாமல், அவருக்கு

யார் கில்லர்?

இருந்த மார்க்கெட்டைக் குறி வைத்த வணிக நிறுவனங்கள் 50 இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தன. அவருடைய உடலும் குரலும் நுகர்வுப் பொருட்களாயின. தன் உடலை அவசர கதியில் நிகழ்ச்சிகளுக்காகத் தயார் செய்யும் நிலைக்குக்கட்டாயப்படுத்தப்பட்டார் மைக். 10 ஆண்டுகள் இடைவெளிக் குப் பின் மேடையில் தோன்றவிருக்கும் பதற்றத்தில் மைக் இரவு பகலாக ஒத்திகையில் ஈடுபட்டார். அவருடைய உடல் சோர்ந்தே இருந்தது. தூக்கம் இன்றிச் சிரமப்பட்டவருக்கு 'புரோபோஃபோல்’ தேவைப்பட்டது. அதுவே அவர் உயிரைப் பறித்து விட்டது. ஒரு கலைஞன் மரித்துப் போனான்.

'புரோபோஃபோல்’ என்கிற மருந்து மட்டுமா மைக்கேல் ஜாக்சனின் மரணத் துக்குக் காரணம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism