அவதூறு வழக்கில் இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்! | director Bala and actor Aarya are present in nellai court for a case

வெளியிடப்பட்ட நேரம்: 23:20 (20/06/2018)

கடைசி தொடர்பு:23:20 (20/06/2018)

அவதூறு வழக்கில் இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்!

’அவன்-இவன்” திரைப்படத்தில் அவதூறான வகையில் கருத்து வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா உள்ளிட்டோர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

’அவன்-இவன்' திரைப்படத்தில் அவதூறான வகையில் கருத்து வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா உள்ளிட்டோர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.  

ஆர்யா பாலா

கடந்த 2011-ம் ஆண்டு ‘அவன்-இவன்’ திரைப்படம் வெளியானது. நடிகர்கள் ஆர்யா, விஷால் நடித்த இந்தப் படத்தை பாலா இயக்கி இருந்தார். கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில், சிங்கம்பட்டி ஜமீன் உருவத்தையொத்த ஒரு கேரக்டர், ஜமீன் பெயரில் இடம் பெற்றிருந்தது. அத்துடன், சிங்கம்பட்டி ஜமீனை அவமதிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றதாகப் புகார் எழுந்தது.

அதனால், சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜன் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அதில், ’சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் பெயருக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில், திட்டமிட்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது; அத்துடன் லட்சக்கணக்கான மக்கள் வழிபட்டுவரக்கூடிய சொறிமுத்து அய்யானார் கோயிலையும் அவதூறாக சித்திரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் வெளியானதால், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதி மற்றும் லட்சக்கணக்கான மக்கள் வழிபடும் சொறிமுத்து அய்யனார் ஆகியோரின் பெயரை திட்டமிட்டு அவமதிக்கும் வகையில் படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஆகியோர் செயல்பட்டு இருக்கிறார்கள். அதனால், அவர்கள் மீதும் படத்தைத் தயாரித்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்கள். 

இந்த வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோர் நீதிபதி முரளீதரன் முன்னிலையில் ஆஜரானார்கள். அப்போது, வழக்கு விசாரணையை 22-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் மூவரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.