`மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் திலீப்?' - தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் மோகன்லால்

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் மீண்டும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திலீப்

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது காரில் கொச்சியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பிரபல நடிகையை, ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது. இந்த வழக்கில் கைதான கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், பிரபல மலையாள நடிகரான திலீப்புக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. 85 நாள்கள் சிறைவாசத்துக்கு பின்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவுடன் அவசரமாகக் கூடிய மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா, பொருளாளர் பதவியில் இருந்து திலீப்பை நீக்கியது. அதில் இருந்து அவர் அம்மாவின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. 

இந்நிலையில், மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவின் பொதுக்குழு கூட்டம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. இதில், நடிகர் சங்கத் தலைவராக இருந்த இன்னசென்ட் பதவி விலகினார். இதையடுத்து இன்னசென்ட் கேட்டுக்கொண்டதன் காரணமாக புதிய தலைவராக நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். யாரும் எதிர்பாராதவிதமாகப் பொதுச்செயலாளராக இருந்த நடிகர் மம்மூட்டியும் பதவி விலகினார். இதனால் மலையாள நடிகர் சங்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக திலீப் கைது செய்யப்பட்டபோது அவரை தாக்கிப் பேசிய பேசிய நடிகர் பிருத்திவி ராஜ், நடிகை ரம்யா நபீஸன் உள்ளிட்டோருக்கு பதவி தரப்படவில்லை. முன்னதாக கூட்டத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!