`நான் ரொம்ப நல்லாயிருக்கேன்!’ - பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி பேட்டி | Singer S.Janaki clears rumours

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (26/06/2018)

கடைசி தொடர்பு:15:30 (26/06/2018)

`நான் ரொம்ப நல்லாயிருக்கேன்!’ - பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி பேட்டி

ஜானகி

ந்தியத் திரையிசை உலகின் மூத்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர், எஸ்.ஜானகி. இவரது உடல்நலம்குறித்து தவறான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. வதந்தியே என்ற நம்பிக்கையுடன் பாடகி எஸ்.ஜானகியைத் தொடர்புகொண்டோம். 

"நான் ரொம்ப நல்லாயிருக்கேன். பையனோடு காரில் டிராவல்ல இருக்கேன். முன்பு பரபரப்பா பாடிக்கிட்டு இருந்தப்போ வெளியிடங்களுக்குப் போக அதிக நேரமிருக்காது. அதனால, இப்போ ஓய்வுக்காலத்துல அடிக்கடி வெளியிடங்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் போயிட்டிருக்கேன். ரீச் ஆக இன்னும் கொஞ்ச நேரமாகும். ஏதாச்சும் முக்கியமான விஷயமா?" என்று அமைதியாகக் கூறியவரிடம், "ஒண்ணுமில்லை மா. உடல்நலத்தைப் பார்த்துக்கோங்க" என்று கூறியதும், "சரி" என்று புன்னகைத்தார்.

எஸ்.ஜானகியின் உடல்நலம்குறித்து அடிக்கடி வதந்திகள் வெளிவந்துகொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்து ஜானகி, பலமுறை கோபத்துடனும் ஆதங்கத்துடன் பதிலளித்துவிட்டார். ஆனாலும், வதந்திகள் நின்றபாடில்லை. வதந்திகள், சிலருக்கு விளையாட்டு. ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவரைச் சார்ந்த பிரியர்களுக்கும் வேதனை. உறுதிசெய்துகொள்ளாமல் எந்த ஒரு விஷயத்தையும் பகிராமல் இருப்பது... நலம், நன்மை!