`எந்த உள்நோக்கமும் இல்லை' - திலீப் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் தரும் மோகன்லால் | No Vested Interest In Kerala Film BodyTaking Back Dileep says Mohanlal

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (02/07/2018)

கடைசி தொடர்பு:07:58 (02/07/2018)

`எந்த உள்நோக்கமும் இல்லை' - திலீப் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் தரும் மோகன்லால்

மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில், நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதுகுறித்து நடிகர் மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார்.

மோகன்லால்

மலையாளத் திரையுலகில் சிறிது காலம் ஓய்ந்திருந்த சர்ச்சை மீண்டும் திலீப் வடிவத்திலேயே வந்திருக்கிறது. மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் கூட்டத்திலேயே, பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரீமா கலிங்கல் உள்ளிட்ட 4 மலையாள நடிகைகள் 'அம்மா' சங்கத்திலிருந்து வெளியேறினர். மேலும், தமிழ் நடிகை ரேவதி தலைமையில் மூன்று நடிகைகள் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் எனக் காட்டமாகக் கடிதம் எழுதியிருந்தனர். இந்த விவகாரத்தில், நாளொரு பேட்டி, கருத்து என வெளிவந்துகொண்டிருக்கின்றன. சர்ச்சைக்குக் காரணமான திலீப்பே, ``நான் நிரபராதி என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்கும் வரை அம்மாவில் இணைந்திருக்க விரும்பவில்லை" எனக் கூறியும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. 

இந்நிலையில், 'அம்மா' சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மோகன்லால், திலீப் சேர்க்கப்பட்டதுகுறித்து நீண்ட இழுபறிக்குப் பின் பெரிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், ``கடந்த ஆண்டு நடந்த அந்த சம்பவத்துக்குப் பின்னர், நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட சக நடிகைக்கு ஆதரவாகவே இருக்கிறோம். புதிய தலைமை பொறுப்பேற்கும்போது, பெரும்பாலான உறுப்பினர்கள் திலீப்பை சங்கத்தில் சேர்க்க ஒருமனதாக விரும்பியதால், அவரை மீண்டும் சேர்த்தோம். இதில் எந்த உள்நோக்கமோ, சுயநலமோ இல்லை. இதில் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால், அதைச் சரிசெய்யத் தயாராக உள்ளோம். திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்ததுகுறித்து அவருக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. கடந்த சில நாள்களாக சிலரின் தூண்டுதல் காரணமாக`அம்மா' சங்கத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

அதிலும்,  `மாஃபியா' போன்ற கடுமையான சொற்களை ஒப்பிட்டு விமர்சனங்கள் செய்வது ஏன் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். மாறாக, வெளியில் இருந்துகொண்டு சங்கத்தை விட்டு வெளியேறுகிறார்கள். எனினும், சங்கத்தில் இருந்து வெளியேறியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் இணைப்போம். ‘அம்மா’ தொடர்ந்து நடிகர், நடிகைகள் நலனில் அக்கறை காட்டிவருகிறது. இதில், 485 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 137 பேர் நடிகைகள். ஏராளமான நடிகர்கள் சொந்தமாக வீடு இல்லாமலும், உடல்நலம் பாதிக்கப்பட்டும் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை நடிகர் சங்கம் செய்துவருகிறது" என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க