`நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கேன்சரிலிருந்து மீண்டு வருவேன்’ - சோனாலி பிந்த்ரே உருக்கம் | Bollywood actress Sonali Bendre suffers Cancer!

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (04/07/2018)

கடைசி தொடர்பு:15:20 (04/07/2018)

`நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கேன்சரிலிருந்து மீண்டு வருவேன்’ - சோனாலி பிந்த்ரே உருக்கம்

 `காதலர் தினம்` புகழ் சோனாலி பிந்த்ரேவுக்குப் புற்றுநோய் என்று உறுதியாகி இருக்கிறது. புற்றுநோயின் பிடியிலிருந்து நடிகை மனீஷா கொய்ராலா மீண்டு வந்த நிலையில், இன்னொரு நடிகை புற்றுநோயின் பிடியில் சிக்கியிருப்பது பாலிவுட் நடிகைகளின் மத்தியில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தனக்கு புற்றுநோய் வந்திருப்பது குறித்து சோனாலி பிந்த்ரே தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில், ''நாம் எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கை நம்மை பந்தாடிவிடுகிறது. இதோ எனக்கு கேன்சர் வந்திருக்கிறது என்று உறுதியாகிவிட்டது. அதிலும், கேன்சர் அதன் உச்சகட்டத்தில் இருக்கிறதாம். எதிர்பாராத பரிசோதனைகள்... அவை தருகிற வலிகள்... என்னைச் சுற்றிலும் எனக்கு உதவி செய்வதற்காக, என் குடும்பமும் நண்பர்களும் சூழ்ந்து நின்றுகொண்டிருக்கிறார்கள். நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். 

சோனாலி

இதிலிருந்து என்னால் தப்பிக்க முடியாது என்பதால் டாக்டர் சொன்னபடி, சிகிச்சைக்காக நியூயார்க் சென்றுகொண்டிருக்கிறேன். இந்தப் போர்க்களத்தில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். என் குடும்பமும் நண்பர்களும் இந்தப் போரில் என்னுடனே இருப்பார்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்'' என்று உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். 

மீண்டு வாருங்கள் சோனாலி!