`ஃபெயில் ஆனாரா மதன் கார்க்கி' - வைரமுத்து சுவாரஸ்யம்!

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு கவிப்பேரசு வைரமுத்து தன் அனுபவத்தை சுவாரஸ்யமாக விவரித்தார்.   

வைரமுத்து

தஞ்சாவூர் பாரத் கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய வைரமுத்து, ``என் இரண்டாவது மகன் மிகவும் நன்றாகப் படிப்பான். அவன் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பான். என் முதல் மகன் ஓரளவுக்குப் படிப்பான். 65 - 75 மதிப்பெண் வாங்குவது வழக்கம். ஆனால்,
ஒரு முறை இரண்டு பாடங்களில் அவன் தேர்ச்சி பெறவில்லை. நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். என் மனைவி பி.ஹெச்.டி முடித்தவர். நான் முதுகலை முடித்தவன். நம் பிள்ளையா படிப்பில் இப்படி என மன உளைச்சல் ஏற்பட்டது. இதை எப்படி சரி செய்வது என யோசித்தேன்.

என் மனைவியிடம் சொன்னேன் ‘இதைப் பற்றி அவனிடம் எதுவும் கேட்காதே. இன்று அவன் மகிழ்ச்சியாக இருக்குமாறு பார்த்துக்கொள். அதன் பிறகு என்னிடம் அவனை அழைத்து வரச் சொன்னேன். மிகவும் அன்பாக அவனிடம் கேட்டேன், ``நாங்க உனக்கு எந்த விஷயத்துலயாவது குறை வச்சிருந்தால் சொல்லுப்பா, திருத்திக்கிறோம்’னு சொன்னேன். அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே அப்பா. நல்லாதான்ப்பா கவனிச்சிக்குறீங்க. நான் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்குறீங்கனு என் பையன் சொன்னான். நாங்க ஏதோ குறை வச்சிருக்கோம். அதனாலதான் நீ இரண்டு சப்ஜெக்ட்ல பெயிலாயிருக்கனு நான் சொன்னதும், என் மடியில சாய்ஞ்சி அழுதுக்கிட்டே ‘மூணு மாசமா கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வமாகி, பரீட்சைக்கு ஒழுங்கா படிக்கலை. அதான்ப்பா பெயிலாயிட்டேன்னு சொன்னான். கிரிக்கெட்ல காட்ற ஆர்வத்தைப் படிப்புலயும் காட்டு. படிப்புல காட்டும் ஆர்வத்தைக் கிரிக்கெட்லயும் காட்டுனு அன்பா சொன்னேன். இனிமே ஒழுங்கா படிக்குறேன்னு சொன்னான். 23 வயசுலயே ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிச்சு பட்டம் வாங்குகிற அளவுக்கு தன்னை அவன் வளர்த்துக்கிட்டான். `பாகுபலி’ படத்துக்கு வசனம் எழுதுற அளவுக்கு தன் திறமைகளை உருவாக்கிக்கிட்ட மதன் கார்க்கிதான் அது.

பிள்ளைகளைக் கண்டுக்காமலும் விட முடியாது... கோபமாகக் கண்டிக்குறதுனாலயும் பலன் இல்லை. அன்பா எடுத்துச் சொல்லுங்க” என தன் அனுபவத்தை சுவாரஸ்யமாக விவரித்ததால், பெற்றோர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் சிலாகிப்போடு கரவொலி எழுப்பினார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!