Published:Updated:

''நானும் ஒரு அப்பாதாங்க... அப்படிச் செய்வேனா!?'' - ட்விட்டர் வசையும் ராதாரவி விளக்கமும்

ஆ.சாந்தி கணேஷ்
''நானும் ஒரு அப்பாதாங்க... அப்படிச் செய்வேனா!?'' - ட்விட்டர் வசையும் ராதாரவி விளக்கமும்
''நானும் ஒரு அப்பாதாங்க... அப்படிச் செய்வேனா!?'' - ட்விட்டர் வசையும் ராதாரவி விளக்கமும்

டந்த சில தினங்களாக, நடிகர் ராதாரவியை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். காரணம் இதுதான்... வாரம் மூன்று முறை வெளிவரும் ஒரு புத்தகத்தில், தன் திரை வாழ்க்கையைப் பற்றி எழுதி வருகிறார். அதில், 'குழந்தையைத் தூங்குவதுபோல நடிக்க வைக்க பிராந்தி கொடுத்தேன். அந்தக் குழந்தை முழிக்க சிகரெட் புகையைக் காலில் படுமாறு வெச்சேன்'' என்றிருக்கிறார்.

''இவரெல்லாம் ஒரு மனுஷனா, நடிகனா... என்கிற ரேஞ்சுக்கு கொதித்துப்போனார்கள் நெட்டிசன்கள். நடிக்கிறதுக்காக இப்படியெல்லாம் செய்வார்களா என்று பல கமென்ட்டுகள். அந்தச் செய்தியைப் படித்ததும் அவருக்கு போன் போட்டேன். 'நல்லவேள நீ போன் பண்ணினம்மா... நான் ஃபேஸ்புக், ட்விட்டர்னு எதுலேயும் இல்ல. அதனால, என்னை யார் திட்டினாலும் அது என் காதுக்கு வராது'' என்றவர், நேரிடையாக விஷயத்துக்கு வந்தார்.

''நான் அந்தப் பத்திரிகையில என்னோட சினிமா அனுபவங்கள் பத்தி ஒரு  தொடர் எழுதிக்கிட்டு வர்றேங்க. அதுல, 32 வருஷத்துக்கு முன்னாடி நான் நடிச்ச 'ஓடங்கள்' படத்தோட ஷூட்டிங் பத்தி பேசறப்போ, இந்த விஷயத்தை நான் நிருபர்கிட்ட  சொல்லியிருந்தேன். ஆனா, நான் சொன்னது வேற... வந்திருக்கிறது வேற. உண்மையில என்ன நடந்ததுனா, அந்த ஷூட்டிங் நடந்தப்போ, 'குழந்தை தூங்கலைன்னா, ஜலதோஷத்துக்குக் கொடுக்கிற மாதிரி ரெண்டு சொட்டு பிராந்தி ஊத்திக்கொடுங்க'ன்னு நான் விளையாட்டா சொன்னது உண்மைதான். ஆனா, நான் அப்படி எதுவும் செய்யலைம்மா. நான் அந்த மாதிரி ஆளும் கிடையாது. எனக்கும் பசங்க இருக்காங்க. ஒரு அப்பாவா இருந்துட்டு அப்படிச் செய்வேனா சொல்லுங்க. அந்த ஷாட்டை குழந்தை தூங்கினதுக்கு அப்புறம்தான் எடுத்தாங்க. இந்த விஷயத்தை அந்த நிருபர்கிட்டேயும் சொன்னேன். ஆனா, அது கட்டுரையில வரலை. அதுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணமாகிடுச்சு'' என்றவர், குழந்தையின் காலில் சிகரெட் சூடு காட்டிய விஷயத்துக்கும் விளக்கம்தந்தார்.

''நீங்க நினைக்கிற மாதிரி குழந்தையோட காலில் சிகரெட் சூடெல்லாம் வைக்கல. கதைப்படி அந்த ஷாட்ல குழந்தை காலை ஆட்டணும். முதல்ல, என் ரெண்டு உள்ளங்கைகளையும் உரசி, அந்தச் சூட்டை குழந்தையோட பாதத்துல வைக்க நினைச்சோம். அப்படியே பண்ணினோம். ஆனா, குழந்தை எழுந்துக்கல. குழந்தை முகத்துல தண்ணி தெளிக்கலாமான்னு யோசிச்சோம். ஷூட்டிங் நடந்தது பீச் பக்கத்துல. அங்க இருந்த குளிரை நினைச்சு அந்த ஐடியாவையும் டிராப் பண்ணிட்டோம். வேற வழியில்லாமத்தான் குழந்தையோட காலுக்குக் கொஞ்சம் பக்கத்துல சிகரெட்டை எடுத்துட்டுப் போனேன். அதுல இருந்து வெளியான அந்த லேசான அனலுக்கே குழந்தை காலை ஆட்ட ஆரம்பிச்சிருச்சு. இதுதான் உண்மையில நடந்தது'' என்றவரிடம் பதறிப்போய்... 'என்ன சார் இப்படி சாதாரணமா சொல்றீங்க... கேட்குறப்பவே மனசு பதறுதே' என்றேன்.

''40 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா உங்களுக்கு. டாக்டர். ராமமூர்த்தின்னு ஒரு கைனகாலஜிஸ்ட் பிரசவம் பார்த்துட்டிருந்திருக்கார்... முதல்ல குழந்தையோட  தலை வெளியே வர்றதுக்குப் பதிலா, கால் வந்துடுச்சு.  உடனே அவரு சிகரெட் சாம்பலை குழந்தையின் காலில் லேசா தட்டினாராம். உடனே குழந்தை காலை உள்ளே இழுத்துக்குச்சாம். அந்த அம்மாவுக்கு பிரசவத்துல சிக்கல் வராம இருக்கத்தானே  டாக்டர் ராமமூர்த்தி அப்படிச் செய்தார்.

நானும் அந்த மாதிரிதான் ஒரு நல்ல நோக்கத்துக்காக செய்ஞ்சேன். குழந்தை காலில் அனல் காட்டின அன்னிக்கு ஒரு தயாரிப்பாளர், ஒரு டைரக்டர், ஒரு ஃபைனான்சியர், கடைசி நாள் ஷூட்டிங்... இத்தனையும் மனசுல வைச்சுத்தான் அப்படி பண்ணினேன். அன்னைக்கு குழந்தை கால் ஆட்டலைனா, நான் சொன்ன அத்தனை பேருக்கும் பிரச்னை வந்திருக்கும். அவங்களுக்கு பிரச்னை வராம தடுத்தேன்னுகூட எடுத்துக்கலாம் இல்லீங்களா?'' என்றபடி போனை வைத்தார். அவர் சொன்ன பதில், மேலும் என்னை அதிர்ச்சியாக்கியது. நான் அதிலிருந்து மீளாமல் இருக்கும்போதே, அவரிடமிருந்து போன்.

''என் தொடர் வெளி வர்ற அந்தப் பத்திரிகை ரிப்போர்டர்கிட்ட இப்ப பேசிட்டேன். நான் குழந்தைக்கு பிராந்தி கொடுக்கலைங்கிறதை அடுத்த  இதழில் எழுதிடுறேன்னு சொல்லியிருக்காரு. என் தொடரைப் படிச்சுட்டு டிவிட்டர்ல  என்னை வறுத்தெடுக்கிறவங்க எல்லாம் இதோட இந்தப் பிரச்னையை விட்ருங்களேன் ப்ளீஸ்'' என்றபடி போனை வைத்தார் நடிகர் ராதாரவி.