வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:19:00 (10/07/2018)

லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்துசெய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

'கோச்சடையான்' பட விவகாரத்தில், லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்துசெய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

லதா ரஜினிகாந்த்

`கோச்சடையான்' படத் தயாரிப்பின்போது பெற்ற 10 கோடி ரூபாய் கடனில், 6.2 கோடி ரூபாயைத் திரும்பத் தரவில்லை. அதைத் திரும்பத் தர லதா ரஜினிகாந்த்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆட்பீரோ என்ற நிறுவனம் முதலில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது. ஆனால், உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடிசெய்தது. இதை எதிர்த்து ஆட் பீரோ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவருகிறது. முந்தைய விசாரணையின்போது, 'ஆட் பீரோ நிறுவனத்துக்கு வழங்கவேண்டிய தொகையை எப்போது வழங்குவீர்கள்; பணத்தைத் திரும்பத் தருவதுகுறித்து, வரும் 10-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், விசாரணையை எதிர்கொள்ளவேண்டி வரும்' என்று  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இதற்கு, லதா ரஜினிகாந்த்தும் விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், 'லதா ரஜினிகாந்த் மீது எந்த எஃப்.ஐ.ஆர் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என்ற பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.  மேலும், அவர் பெங்களூரு நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.