`நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி!’ - மடோனா செபாஸ்டியனைப் புகழ்ந்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27-ம் தேதியன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஜய் சேதுபதி

இதுகுறித்து விஜய் சேதுபதி பேசுகையில், ‘இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இதுதான் ஜுங்காவில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம். அதன் பிறகுதான் அருண் பாண்டியன் வந்தார். அவரை ஒரு ‘கருப்பு தங்கம் ’ என்று சொல்லலாம். அவருக்கும் எனக்கும் இடையே எந்தவொரு வணிகத் தொடர்பும் இல்லை. படத்தின் கதையைக் கேட்காமலேயே தயாரிக்க முன்வந்தார். வாங்கவும் முன்வந்தார். ‘உங்களுடைய கதைத் தேர்வு நன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் நடிக்கும் படத்தைத் தயாரிக்க முன்வந்தேன்’ என்று என்னிடம் முதல் முறை சந்திப்பின்போது சொன்னார். 

சரண்யா பொன்வண்ணன் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட். ‘தென்மேற்குப் பருவக்காற்று ’ படத்தில் அவர் நடிக்கும் காட்சியின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் காட்டும் அக்கறை என்னை வியக்க வைத்தது. அவரின் பொதுநலத்துடன்கூடிய இந்தச் சிந்தனை என்னை ஈர்த்தது. இந்தப் படத்தில் அவர் வடசென்னை ஸ்லாங் பேசுவதில் காட்டிய முயற்சி அவர் இந்தக் கலையை எவ்வளவு தூரம் உண்மையாக நேசிக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது. ஒரு காட்சியை இயக்குநரின் கற்பனை கலந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப செய்திட வேண்டும் என்ற அவர்களின் தவிப்பை நான் இந்தப் படத்தின் மூலம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். சரண்யா மேடத்துடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை வரமாகக் கருதுகிறேன்.

Vijay Sethupathy Junga

மடோனாவுக்கும் என்மீது பெரிய நம்பிக்கை. இயக்குநர் அந்தக் கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்று எண்ணியவுடன், அவரைத் தொடர்புகொண்டு கதையைக் கேட்குமாறு சொன்னேன். அவரும் கதையைக் கேட்டார். என்னைப் பொறுத்தவரை, நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்கு முன், நான் நடிகை காயத்ரியை அப்படி பல முறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து நடிகை மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி.

Madonna Sebastian

ஆண்டவன் கட்டளைக்குப் பிறகு யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம். படப்பிடிப்பு தளத்தில் அந்தக் கேரக்டருக்கு, அந்தத் தருணத்தில் என்ன பன்ச் பேச முடியுமோ அதைப் பேசி அசத்துவார். இந்தப் படத்தை நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம். உங்களின் சுவைக்காக இம்மாதம் 27-ம் தேதியன்று சமர்பிக்கிறோம்’ என்றார். இறுதியாகத் தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் பிறந்த நாளையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!