`இயற்கை விதவிதமாகப் படைத்து, சமமாகப் பாவிக்கிறது!’ - வசீகரிக்கும் 'பேரன்பு' ஆல்பம் அழைப்பிதழ் 

தமிழ் சினிமாவில் தனது படைப்புகள் மூலம் புகழ் பெற்ற இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் ராம். கற்றது தமிழ் தொடங்கி தரமணி வரை இதுவரை 3 படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் தனது ஒவ்வொரு படத்தையும் உயிரோட்டம் உள்ள படைப்பாக இதுவரை தந்துள்ளார். தற்போது இவரது 4 வது படைப்பாகப் பேரன்பு உருவாகியுள்ளது. முதல் மூன்று படங்களிலும் சிறிய நடிகர்களுடன் கைகோத்த ராம் பேரன்புவில் மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் கைகோத்துள்ளார். கொடைக்கானல் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. திரைக்கு வருவதற்கு முன்பே நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ், ஷாங்காய் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்குள்ள பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. 

பேரன்பு

படத்துக்காக என்ன எதிர்பார்ப்பு உள்ளதோ அதேபோல் படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று படங்களிலும் யுவன் - ராம் கூட்டணி இசைக்கு கொடுத்த முக்கியத்துவம் இப்படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை அறிந்துகொள்ள நாளை மறுதினம் பேரன்புவின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. தனது படைப்புகளைக் கவித்துவமாக உருவாக்கும் ராம், தற்போது இசை வெளியீட்டு அழைப்பிதழையும் கவிதை மூலமாகவே உருவாக்கியுள்ளார். வித்தியாசமான முறையில் படத்தின் கதாபாத்திரங்களையும் இணைத்து இசை வெளியீட்டு அழைப்பிதழை உருவாக்கியுள்ளார். ஒரு பக்கத்தில் படத்தின் கதாபாத்திரங்களையும், மறு பக்கத்தில் படத்தில் பணியாற்றியவர்களையும் இணைத்து ஒவ்வொன்றையும் அத்தியாயமாக உருவாக்கியுள்ளார். இசை வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ் இந்த வாசகங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ராம் - மம்மூட்டி

அத்தியாயம் 1 - இயற்கை இரக்கமற்றது

``என் பொண்ணு. பேரு பாப்பா. வயசு 13. மருந்து கொடுத்து குணப்படுத்துறதுக்கு பாப்பாக்கு இருக்கிறது நோயில்ல. இப்படித்தான் பொறந்தா இப்படியேதான் இருப்பா. ஒரு புல் எப்படி செடியாக முடியாதோ அப்படி...

தங்கமீன்களில் வாயாடி செல்லமாவாக வந்து நம்மை அசரடித்து தேசிய விருதைத் தட்டிச் சென்ற சாதனாவே பேரன்பில் பாப்பாவாக....

பேரன்பு இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அத்தியாயம் 2 - இயற்கை அதிசயமானது

தெய்வம் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால்,தேவைப்படும் சமயத்தில் வருமா என்றால் நிச்சயமாக வரும் என்பது எனக்குத் தெரியும். அப்படி வந்தது விஜி என்கிற இந்த விஜயலட்சுமி.

கற்றது தமிழில் `நிஜமாதான் சொல்றியா' என்று ஆனந்தியாகத் தொடங்கிய அஞ்சலி, தமிழ் திரையுலகுக்கு வந்து 10 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. அவரே விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

அத்தியாயம் 3 - இயற்கை மகத்துவமானது

ஆண், பெண் என்ற பால் பிரிவுக்குள் அடங்காதவர். உலகம் எத்தனை தூற்றினாலும் வாழ்வின் மகத்துவத்தைப் போற்றும் ஒரு குழந்தையின் மனதை உலகுக்கு தருபவர். பேரன்பில் இவரின் பெயர் மீரா.

கேரளாவில் `காராடி' என்கிற குக்கிராமத்தில் மரபு வழிபட்ட இஸ்லாம் சமூகத்தில் ஜம்சீராக இருந்த திருநங்கை அஞ்சலி அமீர் `மீரா' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பேரன்பு இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அத்தியாயம் 4 - இயற்கை அழகானது

என் பாப்பாவோட குதிரை. இந்த வெள்ளைக்குதிரையோட பேரு நெயில் பாலிஷ். எந்த மொழியும் தெரியாத என் பாப்பாவோட பாஷை இதுக்கு நல்லா தெரியும். 

இசைக்கு மொழி இல்லை. யுவனின் இசைக்கு என்று ஒரு மொழி உண்டு. கைக்கு அகப்படாத, கண்ணுக்குப் புலப்படாத பேரன்பு, யுவனின் இசையில் புலப்பட்டது. 

அத்தியாயம் 5 - இயற்கை கொடூரமானது 

என் பாப்பா மாதிரி குழந்தைங்களப் பாக்கிறவங்க பரிதாபப்பட்டு அன்ப அள்ளித் தருவாங்க. ஆனா, அப்படி அன்ப தர்ற அவங்க, சீக்கிரம் அவங்களவிட்டு போயிடுவாங்க அப்படிங்கற எதார்த்தம். அந்தக் குழந்தைங்களுக்குப்புரியாது. எப்படி கக்கடைசிப் பூனைக்குட்டிக்கு தான் தன் அம்மாவின் உணவென்று தெரியாதோ அப்படி. 

தன்னைச் சாப்பிடப்போகும் தன் அம்மாவின் மீது கக்கடைசிப் பூனைக்குட்டி கொண்டிருக்கும் பிரியத்தை கவிப்பேரரசு வைரமுத்துவைவிட யாரால் எழுதிவிட முடியும். பேரன்பு, அவரின் வானதூறலில் நனைந்தது.

அத்தியாயம் 6 - இயற்கை கருணையானது

மனுஷன் இல்லாத இடமா, குருவி சாகாத இடமா ஓர் இடம் என் பார்வைக்குத் தேவைப்பட்டது. இந்த வீடு அந்த இடமானது. 

கலை இயக்குநர் குமார் கங்கப்பன், தணிந்து கிடந்த ஏரிக்கு, பாலத்துக்கு, தூர மலைக்கு, விரிந்த வானத்துக்கு, இந்த வீட்டை உருவாக்கியதன் மூலம் ஒரு புதிய அழகை கொண்டு வந்தவர்.

பேரன்பு இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அத்தியாயம் 7 - இயற்கை வர்ணஜாலமானது 

பாப்பாவுக்கு நெயில் பாலிஷ் போட்டுக்கறவங்கள ரொம்ப பிடிக்கும். அவளுக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டுவிடுவா. அவளுக்கு நெயில் பாலிஷ், பெண்களுக்கு உரியது ஆண்களுக்கு இல்லை என்றெல்லாம் தெரியாது. அது அவளோட பிரியத்தின் அடையாளம். பாப்பாவோட நெயில் பாலிஷ் உங்க கையில இருக்கு, பிரியத்தின் நிஜத்தை நகத்தில் படர விடுங்கள்.

ஒளிப்பதிவாளர், தேனி ஈஸ்வர். பேரன்பின் ஈரத்தை, வெப்பத்தை, பனியை, மழையை, மலையை, ஏரியை, மரத்தை, குருவியை, குதிரையைக் கதாபாத்திரங்களாக மாற்றியவர்.

அத்தியாயம் 8 - இயற்கை பேரன்பானது

பாப்பாவுக்கு இருக்கிற DISORDER-க்கு மனுஷங்க கண்டுபிடிச்ச பேரு மூளை முடக்குவாதம். அவ எனக்கு கத்துக்கொடுத்த விஷயங்களுக்கு நான் வச்ச பேரு பேரன்பு. 

என்னுடைய இந்த 30 வருஷ உழைப்போட பலன் `பேரன்பு' - பி.எல்.தேனப்பன் தயாரிப்பாளர்

அத்தியாயம் 9

நீங்க எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கீங்கன்னு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து இந்த கதையை நான் எழுதறேன். 

மூன்று முறை தேசிய விருது பெற்ற இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்கக் கூடிய மெகா ஸ்டார் மம்முட்டி எளிமையின் அப்பாவாக..

அத்தியாயம் 10

இயற்கை ஒவ்வொருவரையும் விதவிதமாய் படைத்திருக்கிறது. ஆனால் சமமாய் பாவிக்கிறது. எத்தனை பெரிய முரண். இந்த முரணால் விளைந்ததே இப்படம்."

பிரியங்களுடன் ராம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!