`நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்!' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம் | lyricist sumathi ram talks about peranbu movie experience

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (17/07/2018)

கடைசி தொடர்பு:12:21 (17/07/2018)

`நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்!' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம்

சுமதி ராம்

 

பிரார்த்தனை

ஒருநாளும் பள்ளிப் பேருந்தில்
ஏற்றி விடாத
அப்பா வாய்க்கப்பட்ட மகள்,
பார்த்து விடக்கூடாது,
பேருந்திற்காகக் காத்திருக்கும்
தன் மகளின் பள்ளிச் சீருடையை
சரி செய்து கொண்டிருக்கும்
ஏதோ ஒரு அப்பாவை.

வாழ்வின் ஒரு கணத்தை உறையவைக்கும் இந்தக் கவிதையை எழுதியவர், சுமதி ராம். `கோடிட்ட இடங்களை நிரப்புக' எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் கவனம் ஈர்த்தவர். `பேரன்பு' படத்தில், `அன்பின் அன்பே' என்ற பாடலின் வழியே தமிழ்த் திரை உலகில் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். முதல் பாடலைப்போல அல்லாமல், 

// வானத்தையும் நிலத்தையும் நிரப்பிட ஒரு பறவை போதும் //

// கடல் சுமந்த சிறு படகு //

// நிலவின் மொழியில் நீ
நிலத்தின் மொழியில் நான்
பேசப் பேச பூக்கள் பேசுதே! // 

ஆகிய வரிகள் தேர்ந்த பாடலாசிரியரின் வரிகளாக ஈர்க்கின்றன.

 

 

சமீபத்தில் நடந்த `பேரன்பு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இத்திரைப்படத்தில் பாட்டு எழுதிய அனுபவத்தை மிகச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். தன் கணவரின் படத்தில் பாட்டெழுத கிடைத்த வாய்ப்பு பற்றி சுமதி ராமிடம் கேட்டேன். 

``நா.முத்துக்குமாரின் இழப்பு, ராம் சாருக்குத் தாங்கமுடியாத இழப்பு. `பேரன்பு' படம் நடந்துகொண்டிருந்தபோது, இதை நினைத்துப் பலமுறை கவலைப்படுவார். அவரைச் சமாதானப்படுத்த, `நீங்களே பாடல்களை எழுதுங்களேன்' என்றேன். அதற்கு அவர், `இல்லையில்லை. பாட்டு எழுதுவது வேறு ஜானர்' என்று மறுத்தார். ஒருநாள், `படத்துக்கு நான் ஏதேனும் உதவிசெய்ய முடியும் என்றால் சொல்லுங்க' என்றேன். வேறு வேலை ஏதாவது கொடுப்பார் என்றே நினைத்துச் சொன்னேன். ஆனால், `பாட்டு எழுதிக்கொடு' என்றது ஆச்சர்யமாக இருந்தது. நான் தயங்கிக்கொண்டே மறுத்துவிட்டேன். அவர் விடவில்லை. யுவன் ஷங்கர் ராஜா சாரின் டியூனை அனுப்பி, வரிகளை எழுதச் சொன்னார். அப்போதும் எனக்கு முழு நம்பிக்கை வரவில்லை. சும்மா சொல்கிறார் என்றே நினைத்தேன். அவர் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்ததால் எழுதினேன்."

பேரன்பு சுமதி ராம்

``எழுதிக்கொடுத்ததும் ஓகே சொல்லிவிட்டாரா?"

(சிரிக்கிறார்) "அது பெரிய கதை. எழுதிக்கொடுத்ததைப் படித்துவிட்டு, `உனக்கு டியூனுக்கு எழுதத் தெரியுது. அதையே படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு எழுது' என்பார். பல்லவி எழுதிக்கொடுத்தால், ஓகே என்பார்.  அடுத்த நாளே `சரியில்லை வேறு எழுது' என்பார். இப்படியே நான்கு மாதங்கள் ஆயிற்று. திடீரென, `முதலில் எழுதிய வரிகளைக் கொடு' என்பார். வீட்டில் இருக்கும் எல்லா பேப்பரிலும் எழுதிப் பார்த்துக்கொண்டே இருப்பேன். `நா.முத்துக்குமார் எழுதவேண்டிய பாடல். அவன் இயற்கையை நேசிக்கும் மனோபாவத்தோடு வாழ்க்கையைப் பற்றிய புரிதலை எளிமையாகவும் எழுதுவான். அவன் எழுதுவதுபோல உன்னிடம் எதிர்ப்பாக்கலை. ஆனால், அவன் இடத்திலிருந்து நீ எழுதுறதை மட்டும் நினைவில் வெச்சுக்கோ' என அடிக்கடி சொல்வார். அது வேறு பயமுறுத்திக்கொண்டே இருக்கும். ஒரு ஹெட்மாஸ்டர் இம்போசீஷன் எழுதச் சொல்வதுபோல எழுதவைத்தார். தினமும் `என்ன வரிகளை மாற்றி எழுதினே?' எனக் கேட்டுக்கொண்டே இருப்பார். ஒருகட்டத்தில், நம்மால் முடியாது என ஒதுங்க நினைத்தேன். `முத்துக்குமார் எவ்வளவு பிராக்டிஸ் பண்ணியிருப்பானு நினைச்சுக்கோ' எனச் சொன்னார். 24 வகைகளாக எழுதிக் காட்டினேன். அவற்றிலிருந்து அவருக்குத் தேவையான வரிகளைத் தேர்வுசெய்துகொண்டார்."

``உங்கள் பாடல் வரிகளைப் படித்ததும் யுவன் ஷங்கர் ராஜா என்ன சொன்னார்?"

``எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் யுவன் சார் கூடுதல் ஸ்பெஷல். ராம் சார் ஓகே சொல்லிவிட்டார் என்றதும் அவருக்கும் ஓகே. ஏனென்றால், அவருக்கு முழு நிறைவு கிடைக்காமல் விடமாட்டார் என்று யுவன் சாருக்குத் தெரியும். இருவருக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. பாட்டு எழுதத் தயக்கமாக இருந்தது என்று சொன்னேன் இல்லையா... அப்போது, `யுவனின் டியூனே ரொம்ப நல்லா இருக்கு. இதை அப்படியே வெச்சுக்கலாமே' என்றுகூடச் சொல்லித் தப்பிக்கப் பார்த்தேன். உண்மையில் அந்த டியூன் அவ்வளவு பிடித்திருந்தது. அதை நான்கு மாதங்கள் கேட்டுக்கொண்டே இருந்தேன். அந்த நேரங்களில் நான் தியான நிலையை உணர்ந்தேன். நான் பாட்டு எழுதியதைவிட இது ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது. இசை வெளியீட்டு விழாவில்தான் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு அமைந்தது."

பேரன்பு

``பாடல் வரிகளைப் படத்தில் காட்சியாகப் பார்க்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்?"
``பாடல் வரிகளை விட காட்சி ரொம்ப ரிச்சாக இருந்தது என்றே நினைக்கிறேன்"

 ``உங்கள் பாடலைக் கேட்டதும் பிள்ளைகளின் ரியாக்‌ஷன்?''

``பல்லவி எழுதியதும் கேட்ட என் பையன், அதைத் தொடர்ந்து `ஹம்' செய்துகொண்டே இருந்தான். அப்பவே இது பலருக்கும் பிடிக்கும் என நினைத்தேன். என் பொண்ணுக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது."

``நா.முத்துக்குமாரின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்தது எது?"

``முத்து அண்ணாவின் எல்லா பாடல்களுமே பிடிக்கும். முத்து அண்ணாவை ஐந்து முறைதான் பார்த்திருக்கிறேன். ராமின் நண்பராகத் தெரியும். கோயம்புத்தூரில் வீட்டுக்கு வந்திருக்கிறார். அதேபோல அவர் எழுதிய பாடல்களை கேசட்டில் கொண்டுவந்தார். பிறகு, சென்னைக்கு வந்தபின் நிறைய உதவிகள் செய்தார். ஆனந்த விகடனில் என்னுடைய ஒரு கவிதை வெளிவந்திருந்தது. `கற்றது தமிழ்' பட விவாதத்தின்போது, அந்தக் கதையை ஒட்டியவாறே வந்த அந்தக் கவிதையை அவரிடம் காட்டிய முத்து அண்ணா, `என்னிடம் சொல்லவே இல்லையே?' எனக் கேட்டிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு என் கவிதை வந்த விஷயம் தெரியும். அந்தக் கவிதை பற்றி ரொம்ப சிலாகித்துப் பாராட்டினார் முத்து அண்ணா. அவரை வெளி ஆளாக ஒருநாளும் நாங்கள் நினைத்தது இல்லை. அவர் எங்கள் வீட்டில் ஒரு நபர்."
 
``தொடர்ந்து பாடல்களை எழுதுவீர்களா?"

``அவரிடம் உரிமையாக நினைத்ததைச் சொல்லிவிடலாம். மற்றவர்களிடம் அப்படிச் சொல்ல முடியாது அல்லவா... (யோசிக்கிறார்) பார்ப்போம்" 


டிரெண்டிங் @ விகடன்