வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (17/07/2018)

கடைசி தொடர்பு:18:40 (17/07/2018)

`பத்மாவத்’தைப் பின்னுக்குத் தள்ளி சல்மான்கானை நோக்கி முன்னேறும் ‘சஞ்சு’

பாலிவுட் திரைப்படங்களின் வசூல் சாதனையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது தற்போது வெளிவந்துள்ள `சஞ்சு' திரைப்படம்.

சஞ்சு

நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அவரது பெயரிலேயே எடுக்கப்பட்ட படம் சஞ்சு.  ரன்பீர் கபூர் ஹீராவாக நடிக்க, ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது இந்தப் படம். மேலும், இதில் பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா சர்மா போன்ற பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படம் வெளியான மூன்று வாரங்களிலேயே பாலிவுட் வசூல் சாதனை படங்களின் வரிசையில் இணைந்துவிட்டது. அந்த அளவுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை வெளியான பாலிவுட் படங்களில் வசூல் பட்டியலில் `சஞ்சு' ஐந்தாவது இடம் பெற்றுள்ளது. இதனால் முன்னதாக அந்த இடத்தில் இருந்த `பத்மாவத்’ படம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து சல்மான் கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற `பஜ்ரங்கி பைஜான்' திரைப்படத்தின் வசூலை நோக்கி `சஞ்சு' முன்னேறிக்கொண்டு வருகிறது. 

பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்த படங்களின் பட்டியலில் 387 கோடி ரூபாயுடன் அமீர் கான் நடித்த `டங்கல்' திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. `பிகே' படம் 340 கோடிகளுடன் இரண்டாவது இடத்திலும், 339 கோடிகளுடன் சல்மான்கான் நடித்த `டைகர் ஜிந்தா ஹே' மூன்றாவது இடத்திலும், 320 கோடியுடன் `பஜ்ரங்கி பைஜான்' நான்காவது இடத்திலும் உள்ளது. தற்போது அந்த வரிசையில் 316 கோடி வசூலுடன் `சஞ்சு' படம் ஐந்தாவது இடத்தைப் பிடித்து சாதனைபடைத்துள்ளது.