வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (23/07/2018)

கடைசி தொடர்பு:21:40 (23/07/2018)

லண்டன் மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் தீபிகா படுகோனுக்கு மெழுகுச் சிலை!

மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், தீபிகா படுகோன் மெழுகுச்சிலை நிறுவ உள்ளனர். இத்தகவலை தீபிகா தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேடம் டூஸாட்ஸ்

‘பத்மாவத்’ படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் தீபிகா படுகோன் பரபரப்பாக இருக்கிறார். இந்நிலையில், ஃபேஸ்புக் லைவ் மூலம் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகக் கூடத்தில், தனது மெழுகுச்சிலையை அடுத்த வருடம் நிறுவ உள்ளதாகத் தெரிவித்தார். முதலில் லண்டனில் உள்ள கண்காட்சிக் கூடத்திலும், அதைத் தொடர்ந்து டெல்லியிலும் நிறுவ உள்ளதாகக் கூறினார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும், அந்தக் குழுவினருடன் இருப்பது வித்தியாசமான அனுபவத்தைத் தருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், தான் மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகம் சென்ற அனுபவம் பற்றிக் கூறும்போது, சிறு வயதில் தன் குடும்பத்தினருடன் சென்றதாகவும் அதுகுறித்த சிறிய நினைவுகள் மட்டுமே தனக்கு இருப்பதாகவும் கூறினார். 

மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், இந்தியப் பிரபலங்கள் ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட சிலருக்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தற்போது தீபிகா படுகோன் இணைந்துள்ளார். இதற்காக, அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நிபுணர்கள்,  சிலை வடிப்பதற்காக அவரை அளவு எடுத்துச் சென்றுள்ளனர். அவரது முகபாவனைகள் கச்சிதமாக இருக்க, தீபிகாவைப் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களும் எடுத்துச் சென்றுள்ளனர்.