வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (24/07/2018)

கடைசி தொடர்பு:21:01 (24/07/2018)

விவசாயிகளின் கதறல்களும், காவல்துறையின் அடக்குமுறைகளும்..! கண்ணீர் ததும்பும் 'பசுமைவழிச் சாலை' பட டீசர்

மத்திய அரசின் சேலம் முதல் சென்னை வரையிலான பசுமைவழிச் சாலை திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'பசுமை வழிச் சாலை' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

சேலம் முதல் சென்னை வரை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு 8 வழிச் சாலை திட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. தமிழக அரசின் இந்தச் செயலுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், எட்டு வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை மையமாக வைத்து 'பசுமை வழிச் சாலை' என்ற திரைப்படம் தயாராகியுள்ளது.

அந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டீசரில், அழகான கிராமங்களில் மக்கள் சந்தோஷமாக விவசாயம் செய்து வாழும் காட்சிகள் தொடக்கத்தில் உள்ளன. அடுத்ததாக, சேலம் விவசாயிகளை காவல்துறையினரைக்கொண்டு ஒடுக்கி, நில அளவைப் பணி நடைபெறுவதும், விவசாயிகள் கதறி அழும் காட்சிகளும் அடுத்தடுத்து தொகுக்கப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகள் அனைத்தும், நிஜத்தில் நடந்ததை ஆவணப்படம் போன்று தொகுத்துள்ளனர். இந்தப் படத்தை சந்தோஷ் கோபால் என்பவர் இயக்கியுள்ளார். நிருபமா என்பவர் தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.