'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' பால் வாக்கர் டாக்குமென்டரி டிரெய்லர் #IAmPaulWalker

'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' நாயகன் பால் வாக்கர் குறித்து  ஐ ஆம் பால் வாக்கர் (I Am Paul Walker) என்ற பெயரில் ஆவணப்படம் தயாராகி இருக்கிறது. 

பால் வாக்கர்

கார் ரேஸ் களத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' வரிசை படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர், பால் வாக்கர். அந்த வரிசைப் படங்களில், வின் டீசலுக்கு இணையான கதாபாத்திரம், லாகவமாக கார் ஓட்டும் திறன் என ரசிகர்கள் இவரைக் கொண்டாடித் தீர்த்தனர். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசைப் படங்கள் மூலம் லைம் லைட்டிற்கு வந்த பால் வாக்கர், கார் விபத்தொன்றில் உயிரிழந்தார். கடந்த 2013-ம் ஆண்டில், தேங்க்ஸ் கிவ்விங் கொண்டாட்டங்களில் திளைத்திருந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி, வாக்கர் பயணித்த கார், லேம்ப் போஸ்டில் மோதி விபத்துக்குள்ளானது. 1973-ம் ஆண்டில் பிறந்த பால் வாக்கர், தனது 40-வது வயதிலேயே மரணித்தது, ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசையில் 6-வது பாகம் வெளியான சில நாள்களில் அவர் உயிரிழந்துவிட்டதால், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சி.ஜி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் உதவியுடன் 7-வது பாகத்தில் பால் வாக்கரை நடிக்க வைத்திருந்தனர். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.  

இந்த நிலையில், பால் வாக்கரின் நினைவுகளைக் கொண்டாடும் விதமாக பாராமவுன்ட் பிக்சர்ஸ் மற்றும் நெட்வொர்க் எண்டெர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து `I Am Paul Walker’ என்ற பெயரில் அவரது வாழ்வுகுறித்து ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார்கள். பாராமவுன்ட் நெட்வொர்க் சேனல்களில், வரும் ந்ம் தேதி திரையிடப்பட இருக்கும் இந்த ஆவணப்படத்தின் முதல் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், பால்வாக்கரின் சிறுவயது காட்சிகள், பால் வாக்கார் பற்றிய நினைவுகளை அவரது குடும்பத்தினர் பதிவுசெய்திருக்கிறார்கள்.  மேலும், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களில் அவருடன் நடித்த டைரெஸ் கிப்சன் மற்றும் இயக்குநர் ராப் கோஹென் ஆகியோரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். இயக்குநர் கோஹென் கூறுகையில், திரைப்படம் அவரது வாழ்க்கையை முழுமையாகப் பதிவுசெய்யவில்லை; பதிவுசெய்யவும் முடியாது’ என்கிறார். மற்றொரு இயக்குநரான வெய்ன் கிராமர் கூறுகையில், ``ஒவ்வொரு  நிமிடத்தையும் சிறந்தமுறையில் கழித்தவன் பால் வாக்கர்’’என்றார்.   

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!