‘அன்புள்ள தலைவரே; உங்களுக்குத் தலைவணங்குகிறேன் - கருணாநிதி குறித்து விஷால் ட்வீட்

‘அன்புள்ள தலைவரே உங்களுக்குத் தலை வணங்குகிறேன்’ என கருணாநிதி குறித்து நடிகர் விஷால் ட்வீட் செய்துள்ளார். 

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலிவு ஏற்பட்டதாக இரண்டு நாள்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியானது. அறிக்கையைத் தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அரசியல் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கோபாலபுரத்துக்கு படையெடுக்கத் தொடங்கினர். 

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக கோபாலபுரம் இல்லத்திலிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்று  மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால் தி.மு.க தொண்டர்கள் சற்று நிம்மதியடைந்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கும் பல அரசியல் தலைவர்கள் நேரில் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றனர். நேற்று இரவு அவரின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சீரானதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. தற்போது அவரின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நடிகரும், தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், கருணாநிதி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``இப்போதிலிருந்து போராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சேரும். ஒரு நாள் இரவு அவர் வலுக்கட்டாயமாகச் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்த வார்த்தையையே அவர் கூறிக்கொண்டிருக்கிறார். என்ன ஒரு உத்வேகமான மனிதர் அவர். எப்போதும் தன் நம்பிக்கையை விட்டுவிடாமல் வாழ்ந்துவருகிறார். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயங்களையும் வித்தியாசமான கோணத்தில் எனக்கு நீங்கள் வழங்கினீர்கள். அன்புள்ள தலைவரே, நான் உங்களுக்குத் தலை வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!