`எல்லாத்தையும் பகிர வேண்டும் என அவசியம் கிடையாது' - காதல் வதந்திக்குப் பதிலளித்த ப்ரியங்கா சோப்ரா

பாலிவுட் முன்னணி நட்சத்திரமான ப்ரியங்கா சோப்ரா தனது காதல் குறித்து பதிலளித்துள்ளார்.

ப்ரியங்கா சோப்ரா

பாலிவுட் முன்னணி நட்சத்திரமான ப்ரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் முன்னணி நட்சத்திரமாக மாறிக்கொண்டிருக்கிறார். அங்கு அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கூடவே வதந்திகளும். ஹாலிவுட் நடிகர், பாடகர் என பல்துறை வித்தகரான நிக் ஜோன்ஸை பிரியங்கா காதலிப்பதாக வதந்திகள் பரவியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக ஊர்சுற்றும் படங்களும் அவ்வப்போது வெளியாகின. இதேபோல் ப்ரியங்கா வீட்டுக்கும் நிக் விசிட் அடித்தார். எனினும், இதுகுறித்து இருவரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில்தான், சல்மான் கானின் அடுத்த திரைப்படமான `பாரத்’ படத்தில் முதலில் ப்ரியங்கா நடிப்பதாக இருந்தது. இது அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திலிருந்து திடீரென பிரியங்கா விலகினார். 

இதற்கான காரணத்தைக் கூறிய அப்படத்தின் இயக்குநர் ஜாஃபர், `ப்ரியங்கா சோப்ரா `பாரத்’ திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்கிறார். அவர் விலகுவதற்கான காரணம் ரொம்ப ஸ்பெஷல். அவரின் முடிவு மிகமிகச் சரியானது. அவருக்கு பாரத் திரைப்படத்தின் சார்பாக வாழ்த்துகள். அவரின் எதிர்கால வாழ்க்கையில் காதலும், மகிழ்ச்சியும் நிறையட்டும்’ என்று பதிவிட்டு ’நிக்’ என்ற வார்த்தையும் சேர்த்துக் கூறினார். இதனால் ப்ரியங்கா - நிக் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்ற செய்திகள் வெளியாகின. இதற்கிடையே, நேற்று இந்தியா திரும்பிய ப்ரியங்கா சோப்ரா தனது திருமணச் செய்தி குறித்துப் பதிலளித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது திருமணம் குறித்துப் பேசிய அவர், ``என் தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றும் பொதுவானது கிடையாது. எனது வாழ்க்கையில் 90 சதவிகிதம் பொதுவானது என்றாலும், 10 சதவிகிதம் எனக்கானது. 

நான் ஒரு பெண். எனது வாழ்க்கையை மறைத்து வைக்க எனக்கு உரிமை உள்ளது. எனது குடும்பம், நண்பர்கள், காதல் குறித்து விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை. நான் ஒரு அலுவலகத்துக்காக இயங்கவில்லை. இதனால் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டாம் என நினைக்கிறேன். நான் ஒரு செலிபிரிட்டியாக இருப்பதால் எல்லாத்தையும் பகிர வேண்டும் என அவசியம் கிடையாது. நான் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உரிமை எனக்கு உள்ளது. எத்தனை பேர் அவர்களது வாழ்க்கையை பொதுமக்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்?" எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!