வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (09/08/2018)

கடைசி தொடர்பு:16:30 (09/08/2018)

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்கர் விருதுகளில் புதிய பிரிவு சேர்ப்பு!

உலக திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படும் ஆஸ்கர் விருதுகளில் அடுத்த வருடம் முதல் சில மாற்றங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஆஸ்கர்

PhotoCredits - Music On Vinyl

உலக சினிமாக்களில் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். இந்த விருதை பெறும் படைப்பாளிகள் இதைத் தங்கள் வாழ்நாளில் மிகப் பெரிய பெருமையாக நினைக்கின்றனர். 90 ஆண்டுகளாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 24 பிரிவுகளின் கீழ் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு போன்ற பல்வேறு பிரிவினருக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் இசையமைப்பாளரான ஏ.ஆர் ரஹ்மான் `ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கிலப் படத்துக்காக இரண்டு பிரிவுகளில் விருது வென்றார். 

மேலும் ஆஸ்கர் தொடங்கிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2001-ம் ஆண்டு அனிமேஷன் படங்களுக்காக ஒரு சிறப்புப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அந்த ஆண்டு வெளியாகும் அனிமேஷன் படங்களில் சிறந்த படத்துக்கு விருது வழங்கப்படும். இதைத்தொடர்ந்து சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது மேலும் ஒரு புதிய பிரிவை அறிமுகப்படுத்த இருப்பதாக ஆஸ்கர் நிர்வாக குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி 'சிறந்த பிரபலமான திரைப்படம்’ என்ற பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி இந்த ஆண்டில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமடைந்த திரைப்படத்துக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதனுடன் சேர்த்து மேலும் சில மாற்றங்களையும் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.