ஹெல்த் & ஃபிட்... 42 கிலோ எடையைக் குறைத்த இசையமைப்பாளர் இமான்!

இசையமைப்பாளர் டி. இமான், தற்போது ஸ்லிம்மாக உள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 42 கிலோ எடையை இவர் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

டி. இமான்

இசையமைப்பாளர் இமான், 'தமிழன்' படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ச்சியாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்த அவர், தற்போது தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். தற்போது, 'சீமராஜா', 'வணங்காமுடி', 'விசுவாசம்', உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக இமான் ஸ்லிம்மாக, இளமையாகக் காணப்பட, பலர் இது தொடர்பாக அவரிடம் கேட்டுள்ளனர். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எதுவும் சாத்தியம் இல்லை என்று இல்லை. சிலர், நான் இப்போதுதான் ஃபிட்டாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சிலர், நான் முன்னர்தான் க்யூட்டாக இருந்ததாகச் சொல்கின்றனர். எதுவாக இருந்தாலும் ஆரோக்கியத்துடனும், ஃபிட்டாகவும் இருப்பது ஒரு நல்ல உணர்வைத் தருகிறது. இதற்காக நான் கடுமையாக உழைத்தேன். நான் பள்ளியில் படிக்கும்போது கீ போர்டு ரிக்கார்ட்ங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தேன். அப்போதிலிருந்தே, வேலை காரணமாகக் குண்டாக இருப்பேன். அதன் பின்னர், முறையில்லாத உணவுப் பழக்கத்தினாலும், மணிக்கணக்காக ஸ்டூடியோவில் அதிகம் உடல் அசைவில்லாத காரணத்தாலும் உடல் எடை அதிகரித்தது. 

இப்போது, உடல் ஆரோக்கியம் தொடர்பாக சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். அதனால், தினமும் உடல்பயிற்சி மற்றும் முறையான டயட் மூலம் ஒரு வருடத்தில் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளேன். முன்னதாக, 117 கிலோ இருந்தேன். இப்போது 75 கிலோ. பலர், நான் உடல் எடை குறைத்தது தொடர்பாகக் கேள்வி எழுப்பி வருவதால், இதைச் சொல்கிறேன். நான் எனது எடையைக் குறைக்க முழுக்க முழுக்க இயற்கையான முறைகளைத்தான் கடைப்பிடித்தேன். கொஞ்சம் கால தாமதமானாலும், இயற்கை முறைதான் சிறந்தது. இது, யாரோ ஒருவரையாவது உற்சாகப்படுத்தினால், மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார். இசையமைப்பாளர்கள் கதாநாயகர்கள் ஆகும் வரிசையில் அடுத்து இமானும் இணைவாரோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!