வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (14/08/2018)

கடைசி தொடர்பு:01:00 (14/08/2018)

`ரன்வீர் சிங்குக்கு பயிற்சி அளிக்கும் கபில்தேவ்' - எதற்காக தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டு முதன்முதலாக உலகக்கோப்பையை கைப்பற்றிய வரலாற்றை தழுவி திரைப்படம் உருவாகிறது. இதில் கபில்தேவ்வாக ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார். 

ரன்வீர் சிங் - கபில்தேவ்

இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டு முதன்முதலாக உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது. முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி அந்தச் சாதனையை படைத்தது. இதன்பிறகு இந்திய அணி கிரிக்கெட் அரங்கில் கோலாச்சியது எனக் கூறலாம். இந்த வரலாற்று நிகழ்வை மையப்படுத்தி தற்போது திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. ஆம், `83' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் `பத்மாவத், `பாஜிராவ் மஸ்தானி' படப்புகழ் ஹீரோவும், நடிகை தீபிகா படுகோனின் உயிர் காதலனுமான ரன்வீர் சிங் நடிக்கிறார். இதில் ரன்வீர் சிங் முன்னாள் கேப்டன் கபில்தேவ் வேடத்தில் நடிக்கவுள்ளார். பாலிவுட்டின் பேமஸ் இயக்குநர் கபீர் கான் இதனை இயக்குகிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாகவுள்ளது. இதற்காக 1983 உலகக்கோப்பையில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களிடம் சென்று அவர்களின் அனுபவத்தை கேட்டறிந்து வருகின்றனர் படக்குழு. மேலும் இங்கிலாந்து சென்று அங்குள்ள உலகக்கோப்பை பைனல் நடைபெற்ற லார்ட்ஸ் மைதானத்துக்கும் விசிட் அடித்துள்ளனர். 

உலகக்கோப்பை நடந்த மைதானங்களில் படப்பிடிப்பு நடத்தவே இந்த விசிட் எனக் கூறப்படுகிறது. முன்னதாக சச்சின் உள்ளிட்ட வீரர்களை சந்தித்த ரன்வீர் மற்றும் கபீர் கான் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், ஹீரோ ரன்வீர் சிங்குக்கு  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பயிற்சி அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பந்துவீச்சு பயிற்சி உள்ளிட்டவைகளை அவர் சொல்லி தரவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் குறித்து பேசிய ரன்வீர், ``உண்மையிலேயே கபில்தேவ் ஒரு லெஜண்ட். அவர் வேடத்தில் நான் நடிப்பேன் என்றே ஒப்பந்தம் செய்துள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க