Published:Updated:

ஆசை : உதடு ஒட்டாத ஒரே குறள்!

ஆசை : உதடு ஒட்டாத ஒரே குறள்!

பிரீமியம் ஸ்டோரி

'நான் வனிதா ஆனந்த். தமிழ் மீது ஆழ்ந்த பற்று. இசை என்றால், பிரியம். பண்பலை வானொலி அலைகளுடன் என் ஒவ்வொரு நாளும் கழியும்.

##~##
பண்பலை நிகழ்ச்சிகளின்போது நானும் என்னை மறந்து ஆர்.ஜே-வுடன் பேசிக்கொண்டு இருப்பேன். அதைக் கேட்டு என் ஒன்பது வயது மகள், 'ஏதோ எஃப்.எம்-லயே வேலை பார்க்குற மாதிரி பேசிட்டு இருக்க. நான் பெரியவளாகி எஃப்.எம்-ல வேலைக்குப் போறேன். அப்போ உன்னை அங்கே கூட்டிட்டுப் போயி சுத்திக் காட்டுறேன்’ என்று கிண்டல் அடிப்பாள். 'நீ ஒண்ணும் மெனக்கெட வேண்டாம். நான் விகடன் வாசகி. 'ஆசை’ பகுதிக்கு ஒரு லெட்டர் போட்டா, அடுத்த நாளே அவங்க என்னை எஃப்.எம்-ல ஒருநாள் ஆர்.ஜே-வா வேலை பார்க்க வெச்சிருவாங்க. நோ தேங்க்ஸ்!’ என்று அவளைச் சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். என் ஆசையை நிறைவேற்றுவாயா விகடன்?’ - சென்னை அரும்பாக்கத்தில் இருந்து நம் அலுவலகம் தொட்ட கடிதத்தின் சாராம்சம் இது!

 'ஹலோ எஃப்.எம்’ நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, வனிதாவைத் தொடர்புகொண்டோம். ''ஒருவேளை நம்மளைக் கண்டுக்கலைன்னா என்ன பண்றதுன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். தேங்க்ஸ்... தேங்க்ஸ் விகடன்!'' என்று ஆர்வமாகக் கிளம்பி வந்தார் வனிதா.

அலுவலக வாசலுக்கே வந்து வனிதாவை வரவேற்றார் ஹலோ எஃப்.எம்-மின் தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சுரேஷ். அறிமுகமான ரேடியோ ஜாக்கிகளின் குரலைவைத்தே, ''நீங்கதானே 'சொல்லியடி’ சுரேஷ், நீங்க 'அஞ்சறைப் பெட்டி’ கே.கே! எங்கே 'அஞ்சலி அபார்ட்மென்ட்’ மேனேஜர் மாதவனைக் காணோம்?'' என்று ஆச்சர்யம் அளித்தார் வனிதா.  

உற்சாகமான ஆர்.ஜே-க்கள் வனிதாவை ஸ்டுடியோவுக்குள் அழைத்துச் சென்றார்கள். 'அஞ்சறைப் பெட்டி’ கே.கே-வுடன் வனிதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக ஏற்பாடு. ''நேயர்களுடன் ஜாலியாகப் பேசி அரட்டை அடிக்கணும். அவங்க கேட்கிற பாடலை கம்ப்யூட்டரில் தேடி ப்ளே பண்ணணும்... அவ்வளவுதான். எளிமையான வேலைதான். ஆனா, ரொம்பவே கவனமா இருக்கணும். ஜாலியாப் பேசுறோம்னு நேயர்கள் மனம் புண் படுற மாதிரி பேசிடக் கூடாது! இப்போ நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா?'' என்று கே.கே கேட்க, ஆர்வம் மின்னும் கண்களுடன் ஆமோதித்தார் வனிதா.

ஆசை : உதடு ஒட்டாத ஒரே குறள்!

'ஆசை’ப்பட்டு வனிதா நிகழ்ச்சியில் பங்குகொள்வதைப்பற்றி அறிமுகம் அளித்துவிட்டுப் பேசுமாறு வனிதாவுக்கு சைகை செய்தார் கே.கே. ''வணக்கம். என் கணவர் ஆனந்த். மகள் சம்யுக்தா. மாநிலக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிச்சேன். இப்போ சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். நேற்று வரை இப்படி ஓர் ஆச்சர்யம் என் வாழ்க்கையில் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு தெரியாத எதிர்பார்ப்புதான் வாழ்க்கையைச் சுவாரஸ்யப்படுத்துது. எனக்கு மட்டுமில்லை... உங்களுக்கும் இந்த மாதிரி ஆச்சர்யம் எப்பவும் நிகழலாம். வாழ்க்கையைக் கொண்டாடுங்க!'' என்று சரளமாக வனிதா பேசியதைக்கண்டு ஆச்சர்யப்பட்டார் கே.கே. அவருக்கு தம்ஸ்-அப் காண்பித்தபடி, ''தொடர்ந்து இணைந்திருப்போம் நேயர்களே. இப்ப

ஆசை : உதடு ஒட்டாத ஒரே குறள்!

உங்களுக்கே உங்களுக்காக ஒரு பாட்டு!'' என்ற கே.கே-வின் அறிவிப்பைத் தொடர்ந்து பாடல் ஒலிக்கிறது. பாடல் முடிந்ததும் தொடர்கிறது நிகழ்ச்சி.

''என்னங்க, கையில் பெரிய புத்தகம் வெச்சிருக்கீங்க. அதுவும் எழுத்து எல்லாம் ரிவர்ஸ்ல இருக்கு. இந்த புத்தகத்தைப்பத்தி நேயர்கள்கிட்ட ஷேர் பண்ணிக்கோங்க!'' என்று கே.கே. சொல்ல, தொடர்கிறார் வனிதா. ''இது திருக்குறள் புத்தகம். 1,330 திருக்குறளையும் கண்ணாடி பிம்ப வடிவில் நானே கைப்பட எழுதி இருக்கேன். அப்படியே வாசிக்க முடியாது. முகம் பார்க்கும் கண்ணாடியில் காட்டினால்தான் படிக்க முடியும்! 'செம்மொழி மாநாடு’ சமயம், ஒரு தமிழச்சியாக என்னால் முடிந்த பங்களிப்பாக இருக்கட்டுமேன்னு இதை உருவாக்கினேன். ஒரு நாளைக்கு 13 அதிகாரங்கள் வீதம் 10 நாட்களில் எழுதி முடிச்சேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச ரெண்டு குறள் சொல்லவா? 35-வது அதிகாரமான துறவு-ல் 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’!'' என்ற வனிதாவிடம், ''என்கிட்டே அர்த்தம் கேட்டுடாதீங்க. நான் அப்பீட்!'' என்று முன் ஜாமீன் வாங்கினார் கே.கே. ''எந்தெந்தப் பொருள்களில் எல்லாம் மனமானது விலகி இருக்கிறதோ, அந்தப் பொருள்களால் நமக்குத் துன்பம் கிடையாது. மனது ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய இந்தக் குறளை உச்சரிக்கும்போது உதடுகள்கூட ஒட்டாது. உதடு ஒட்டாமல் உச்சரிக்கக்கூடிய ஒரே குறள் இதுமட்டுமே. அதேபோல், வான் சிறப்பு பற்றிச் சொல்லும்போது 2-வது அதிகாரத்தில் வரும் 'துப்பார்க்குத் துப்பாய’ எனத் தொடங்கும் குறள், 'மழை குறிப்பிட்ட இடைவெளியில் பூமியைத் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறது. அந்தக் குறளின் ஒவ்வொரு வார்த்தையிலும் உதடுகள் ஒட்டும்!'' என்று வனிதா சொல்ல, ''தமிழேன்டா'' என்று

கை தட்டிப் பாராட்டுகிறார் கே.கே. ''ஓ.கே. அடுத்தது சமையல் டிப்ஸ். வனிதா நீங்க நல்லா சமைப்பீங்கன்னு சொல்லி இருக்கீங்க. நேயர்களுக்கு நீங்க சமையல் டிப்ஸ் சொல்லலாம்தானே... பேராபத்து எதுவும் நிகழ்ந்துவிடாதே?'' என்று கே.கே. கலாய்க்க, வெட்கப் பட்டுச் சிரிக்கிறார் வனிதா. ''திடீர்னு விருந்தினர்கள் வந்துட்டா செய்ற இன்ஸ்டன்ட் பாயசம் பத்திச் சொல்றேன். வடிச்ச சாதத்தை சூடா இருக்கும்போதே, மிக்ஸியில போட்டு அரைச்சு, கொஞ்சம் பால் ஊத்திக் கொதிக்கவைக்கணும். சர்க்கரை, ஏலக்காய், முந்திரின்னு போட்டு இறக்கிக் குடிச் சோம்னா...'' என்று வனிதா பேசிக்கொண்டு இருக்கும்போதே, ''என்ன, வாய் ஒட்டிக்குமா?'' என்று குறுக்குச்சால் ஓட்டுகிறார் கே.கே.

நேயர்களின் பாராட்டு மழையில் வனிதா திடீரென உற்சாக மாகி, ''தாஜ்மஹால் ஓவியக் காதல்... தேவதாஸ் காவியக் காதல்'' என்று பாட ஆரம்பித் தார். ''ஏங்க, சத்தியமா சொல்றேன். இது நம்ம எஃப்.எம்-ல போட்ட பாட்டு இல்லைங்க. வனிதா பாடின பாட்டு. ஃப்யூச்சர்ல சிங்கர் ஆகுறதுக்கு உங்களுக்கு நல்ல ஸ்கோப் இருக்கு'' என்று கே.கே வாழ்த்த, வனிதா முகத்தில் இன்னும் அடர்த்தியாக வெட்கம்.

ஆசை : உதடு ஒட்டாத ஒரே குறள்!

'' 'சந்தோஷமா இருங்க... மத்தவங்ககிட்ட அன்பா இருங்க... சிரிச்சுட்டே இருங்க... எல்லோருமே அழகாயிடலாம்!'' என்று வனிதா மன அழகுக் குறிப்பைக் கொடுக்க, ''ஏங்க... நீங்க இப்படிச் சொன்னா 'சந்தனம் பூசுங்க, தக்காளி நசுக்குங்க’ன்னு நான் கொடுத்த பியூட்டி டிப்ஸ் எல்லாமே பொய்னு ஆகிருமே. அப்போ, இனிமே நான் பியூட்டி டிப்ஸ் சொல்லவே முடியாதா?'' என்று கே.கே மிரள... அடக்கமாகச் சிரிக்கிறார் வனிதா.

ஆசை : உதடு ஒட்டாத ஒரே குறள்!

''குழந்தைக் கடத்தல் பெருகிட்டு வருது. ஒவ்வொரு குழந்தைக்கும் நம் வீடு, பள்ளி, அக்கம்பக்கத்தினரின் தொலைபேசி எண்களை மனப்பாடமாகச் சொல்லிக்கொடுங்கள். தற்காப்புக் கலை கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். அடிக்கடி பள்ளி ஆசிரியர்களிடம் பேசுங்கள்!'' என்று குழந்தைகள் பராமரிப்பு டிப்ஸ் வழங்கவும் மறக்கவில்லை ஆசிரியை வனிதா. பின் நேரடியாக நேயர்களுடன் பேசி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, பாடல்களை ஒலிக்கவிட்டார். எந்தப் பிசிறும் இன்றி ரேடியோ ஜாக்கியாக வனிதா பின்னியெடுக்க, ''ஆஹா... 'அஞ்சறைப் பெட்டி’க்கு அடுத்த ஆள் கிடைச்சுட்டாங்கபோல. கே.கே-வுக்கு ஆப்புதானா?'' என்று கலவரமானார் கே.கே. தொடர்ந்த நிகழ்ச்சி கலகலப்பாக அரங்கேறி நிறைவடைந்தது.

அனைத்து ஆர்.ஜே-க்களுடன் புகைப்படப் படலம் முடிந்து, பிரியாவிடை பெற்றுக் கிளம்புகையில், வனிதாவின் விழிகளில் ஈர மினுமினுப்பு!

படங்கள் : என்.விவேக்

ஆசை : உதடு ஒட்டாத ஒரே குறள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு