சுதந்திர தினத்தில் சர்ச்சையைக் கிளப்பிய பாலிவுட் பட போஸ்டர்! | Namaste England’s Poster Courts Controversy

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (15/08/2018)

கடைசி தொடர்பு:18:20 (15/08/2018)

சுதந்திர தினத்தில் சர்ச்சையைக் கிளப்பிய பாலிவுட் பட போஸ்டர்!

அர்ஜூன் கபூர், பரிணீதி சோப்ரா ஆகியோர் நடித்துள்ள `நமஸ்தே இங்கிலாந்து’ படத்தின் போஸ்டர் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

சர்ச்சையைக் கிளப்பிய நமஸ்தே இங்கிலாந்து பட போஸ்டர்

நாடு முழுவதும் 72வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கின்றன. சுதந்திர தினத்தை ஒட்டி சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். மேலும், பல படங்களில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், டிரெய்லர், டீசர் என வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில், போனி கபூரின் மகனும் நடிகருமான அர்ஜூன் கபூர் நடித்துள்ள நமஸ்தே இங்கிலாந்து படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. 

அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரின் அக்‌ஷய் சின் (Aksai Chin) பகுதி இடம்பெறாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் அமைந்திருக்கும் அந்த பகுதியைத் தங்களுக்குச் சொந்தம் என இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுமே உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த விவகாரத்தால் இருநாடுகளிடையேயா ராஜாங்கரீதியிலான உறவு கடந்த 1962ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின் முறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாட்டின் வரைபடத்தையோ அல்லது எல்லையையோத் தவறாகச் சித்தரிப்பது இந்திய அரசியல் சாசனத்தின்படி குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த குற்றத்துக்கு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்க வழிவகை இருக்கிறது. இந்தியாவின் வரைபடத்தைத் தவறாகச் சித்தரித்த படக்குழுவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், படக்குழுவினரிடமிருந்து இதுவரை எந்த விளக்கமும் இந்த விவகாரம் தொடர்பாக வெளியாகவில்லை. அம்ருத்லால் ஷா இயக்கி தயாரித்திருக்கும் நமஸ்தே இங்கிலாந்து படம், வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.