விராட், அனுஷ்காவைப் போல் இத்தாலியில் திருமணம் செய்யும் ரன்வீர், தீபிகா!

பாலிவுட் காதல் ஜோடி தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியில் நடைபெறவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகர் கபீர் பேடி. 

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்

ஷாருக்கான் நடித்து வெளிவந்த `ஓம் சாந்தி ஓம்’ படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அதே காலகட்டத்தில் இந்திப் படங்களில் அறிமுகமானவர் ரன்வீர் சிங் இந்தி சினிமாவின் சர்ச்சை நாயகன் பெயரெடுத்தவர். இருவரும் 'ஃபைண்டிங் ஃபேனி', `கோலியோன் கே ராஸ்லீலா : ராம்லீலா’, `பாஜிராவ் மஸ்தானி', `பத்மாவத்’ ஆகிய படங்களில் தீபிகாவுடன் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டதாக பாலிவுட் மீடியாக்கள் கிசுகிசுத்து வந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நம்ம ஊர் நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் போல் இவர்களும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்தனர். இதனால் இருவரின் வீட்டார்களும் திருமண ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும், வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. 

இந்த வதந்தியை தற்போது பிரபல இந்தி நடிகர் கபீர் பேடி உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``சிறந்த ஜோடி, இத்தாலி சிறந்த இடம், சிறந்த நிகழ்ச்சி. ரன்வீர் - தீபிகா படுகோன் திருமணத்துக்கு வாழ்த்துக்கள். வாழ்க்கை முழுவதும் சந்தோஷங்கள் நிறைந்திருக்கட்டும்" எனப் பதிவிட்டுள்ளார். ஃபிலிம்பேர் வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

கபீர் பேடி ட்விட்டர்

இதன்மூலம் ரன்வீர் - தீபிகா படுகோனின் திருமணம் இத்தாலியில் நடைபெறவுள்ளது உறுதிப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நவம்பர் 20ம் தேதி திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மும்பையில் சினிமா நண்பர்களுக்காக ஒரு வரவேற்பும் தீபிகா உறவினர்களுக்காகப் பெங்களூருவில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் எனப் பாலிவுட் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா திருமணமும் இத்தாலியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!