`ஆடை’ படத்தில் நடிக்கும் அமலா பால்... பின்னணி என்ன? 

கோலிவுட்டின் `மேயாத மான்’ படத்தின்மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ரத்னகுமார். அவரது இயக்கத்தில் உருவாகும் `ஆடை’ படத்தில் நடிக்கிறார் அமலா பால். `திருட்டுப்பயலே 2’, `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படங்களுக்குப் பிறகு, அமலா பால் நடித்துவரும் படம், `அதோ அந்தப் பறவை’. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக, கேரளாவில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்க உள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அமலாபால்

உணர்ச்சிகரமான கதைக்களத்தைக் கொண்ட `ஆடை’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதால், பிற படங்களைத் தவிர்த்துவிட்டாராம் அமலா பால். தமிழ் சினிமாவில், `கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அபூர்வமாகவே அமையும். அந்த வரிசையில் இந்தப் படம் இருக்கும்’ என்கிறது கோலிவுட் வட்டாரம்.

பெண்களை மையமாகவைத்து எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் சூப்பர் நேச்சுரல், ஹாரர் வகையில்தான் இருக்கும். ஆனால், இது எந்த வகையிலும் சேராத படமாம் `ஆடை’. ரசிகர்களின் கணிப்பை முறியடிக்கும் வகையில், எளிதில் யாரும் ஊகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்தின் பிற பாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. விரைவில் படம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!