வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (19/08/2018)

கடைசி தொடர்பு:02:00 (19/08/2018)

இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி

கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிடும் நோக்கில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

ஷங்கர்

கடந்த சில நாட்களாக, கேரள மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பலர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 357 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரைக் காணவில்லை. வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கேரள மக்களின் துயர் துடைக்க பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்கின்றனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் தொடர்ந்து நிதியுதவி செய்துவருகின்றனர். கோலிவுட்டின் இயக்குநர்களும் இப்போது கேரளாவுக்கு உதவ முன்வந்துள்ளனர். அந்தவகையில், இயக்குநர் ஷங்கர் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவியை ஆன்லைன் (RTGS) மூலம் வழங்கியுள்ளார்.