இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ!

கேரள மக்களுக்காக ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்துள்ளார் தோனியின் பயோபிக் திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத். 

சுஜாந்த் சிங்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது. பல்வேறு மாநில அரசுகள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சாதாரண குடிமகன்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகின்றனர். மக்களின் இந்த மனித நேய செயலால் கேரளம் வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கேரள மக்களுக்காக 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் பாலோயரின் வேண்டுகோளுக்கிணங்க இதனை அவர் செய்துள்ளார். 

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது முதல் அதுகுறித்து சமூக வலைதளங்களில் சுஷாந்த் பதிவிட்டு வந்தார். மேலும், தனது சமூகவலைதள கணக்குகளின் புகைப்படத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் வரைபடத்தையும் வைத்துள்ளார். அப்படி இரண்டு நாள்கள் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அனைவரும் முடிந்த அளவு உதவ வேண்டும். குறைந்தபட்சம் அம்மக்களுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்" என்றுக் கூறி பதிவிட்டார். இந்தப் பதிவில் தங்களால் இயன்ற உதவி செய்தது குறித்து அவரது ஃபாலோயர்கள் கமென்ட் செய்தனர். அப்போது அதில் பதிவிட்ட சுபம்ரஞ்சன் என்பவர், ``என்னிடம் பணம் இல்லை. ஆனால், கேரள மக்களுக்காக சில உணவுகளைக் கொடுக்க வேண்டும். எப்படிக் கொடுப்பது" எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த சுஷாந்த்,``கவலைப்படாதீர்கள், நான் உங்கள் பெயரில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளிப்பேன். அது நம் நண்பர்களிடம் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்து எனது பக்கத்தில் பதிவிடுகிறேன். என்னை இந்த உதவியைச் செய்ய தூண்டியதுக்கு நன்றி" என்று கூறினார். 

ட்விட்டர் பதிவு

சொன்னது போலவே, இன்று கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சுபம்ரஞ்சன் பேரில் நிதியுதவி அளித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்,``நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நினைத்ததைச் செய்துவிட்டேன். நீங்கள்தான் என்னை இதைச் செய்ய வைத்துள்ளீர்கள். உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். சரியான நேரத்தில் தேவையானவற்றை நீங்கள் அளித்துள்ளீர்கள்" என்று கூறி அதைத் தனது சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். சுஷாந்த் சிங்கின் இந்தச் செயல் அவரின் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரின் செயலைப் பாராட்டி கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!