வெளியிடப்பட்ட நேரம்: 03:42 (23/08/2018)

கடைசி தொடர்பு:07:25 (23/08/2018)

இரண்டு வேடத்தில் அஜித்; வெளியானது ’விஸ்வாசம்’ ஃபர்ஸ்ட் லுக்!

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் ’விஸ்வாசம்’. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் இது. இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஏற்கெனவே ’பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் அஜித் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர்.

விஸ்வாசம்

இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட, அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள். தற்போது விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.