வெளியிடப்பட்ட நேரம்: 22:46 (28/08/2018)

கடைசி தொடர்பு:10:32 (29/08/2018)

`தயவுசெய்து உதவிகளைக் கொச்சைப்படுத்தாதீர்கள்' - ட்ரோல்களால் வேதனைப்படும் மலையாள நடிகர்!

'மனித நேயத்தில் செய்த உதவிகளைத் தயவுசெய்து கொச்சைப்படுத்தீர்கள்' என மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கூறியுள்ளார். 

டொவினோ தாமஸ்

Photo credit: Twitter/Akkyllees

மலையாள நடிகர் டொவினோ தாமஸ், 'மாரி-2' படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரில் பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்துவந்தனர். இது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்படி வீடு இல்லாமல் தவித்தவர்களை கேரள நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். அந்த வகையில், நடிகர் டொவினோ தாமஸும் திருச்சூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களைத் தனது வீட்டில் தங்கவைத்து உதவிகளைச் செய்தார். இதேபோல, நேரடியாக முகாம்களுக்குச் சென்று உதவியும், சமூக வலைதளங்கள் மூலம் உதவிகளைத் திரட்டியும் வந்தார். இவரின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவந்தனர். அதேவேளை, சிலர் சுய விளம்பரத்துக்காக டொவினோ இவ்வாறு செய்கிறார் என வலைதளங்களில் ட்ரோல் செய்துவந்தனர். 

இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மலையாள செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அதில், ``பப்ளிசிட்டிக்காக நான் உதவிகள் செய்தேன் என்பதைக் கேட்கும்போது வேதனையாக இருக்கிறது. மனிதாபிமானம் உள்ளவன் என்ற அடிப்படையிலேயே நான் இந்த உதவிகளைச் செய்தேன். நான் உதவி செய்தேன் என்பதற்காக மக்கள் யாரும் எனது படத்தைப் பார்க்க வேண்டாம். தயவுசெய்து இதை பப்ளிசிட்டிக்காகச்  செய்தேன் எனக் கூற வேண்டாம். இது என்னைக் காயப்படுத்துகிறது. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், பப்ளிசிட்டி தேடும் அளவுக்கு ஒன்றும் நடிகர்கள் முட்டாள்கள் கிடையாது. மனித நேயத்தில் செய்த உதவிகளைத் தயவுசெய்து கொச்சைப்படுத்தாதீர்கள்" என்று வேதனையுடன் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க