வெளியிடப்பட்ட நேரம்: 01:34 (03/09/2018)

கடைசி தொடர்பு:08:12 (03/09/2018)

``சகோதர, சகோதரிகளுக்கு சிறு உதவி" - கேரள மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர். ரஹ்மான் கேரளாவுக்கு நிதிஉதவி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவிசெய்யும் வகையில் ரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளித்துள்ளார். கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு இந்த தொகையை அளித்தார்.

ஏ.ஆர். ரஹ்மான்

கோலிவுட், பாலிவுட் என பல்வேறு இசைக்கலைஞர்களுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வட அமெரிக்காவின் 9 முக்கிய நகரங்களில் தன் இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டு கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி ஓக்லாந்து நகரில் தொடங்கி லாஸ் ஏஞ்சல்ஸ், அடாலாண்டா ஆகிய நகரங்களில் நடத்தி முடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று, (செப்டம்பர் 1, சனிக்கிழமை) வாஷிங்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் மனோ, ஹரிசரண், நீத்தி மோஹன், உதித் நாரயண், ஜாவேத் அலி ஆகியோர் பங்குபெற்று பிரபல இந்தி, தமிழ், தெலுங்குப் பாடல்களைப் பாடினர். நிகழ்ச்சியின் இறுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு நிகழ்ச்சியில் பணியாற்றிய அனைவரது சார்பிலும் ரூபாய் ஒரு கோடி நன்கொடையாக வழங்கினார் ரஹ்மான். 

இந்த நிதி கேரள மாநில முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியைச் சென்றடையும். ஏற்கெனவே, கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்ட திட்டமிட்டு ஒன்பது நகரங்களோடு ஃப்ளோரிடா மாகாணத்தின் ஓர்லாண்டோ நகரத்தில் செப்டம்பர் 9-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றைப் பிரத்தியேகமாக இணைத்திருந்த வேளையில் தற்போது இந்த நிதியுதவியை ஏ.ஆர்.ரஹ்மான் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் புகைப்படத்தோடு ட்விட்டரில் ``சகோதர, சகோதரிகளுக்கு சிறு உதவி, அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருக்கும் தங்கள் குழுவின் இந்தப் பங்களிப்பு சிறியளவில் உதவும்" என நெகிழ்ந்து பதிவிட்டிருந்தார்.