வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (05/09/2018)

கடைசி தொடர்பு:19:20 (05/09/2018)

மகளிர் அணி உறுப்பினர்களுக்கு ரஜினிகாந்த் விதித்த கட்டுப்பாடுகள் !- முழு விவரம்

'அனைத்து மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணிகளின் அமைப்புப் பணிகள், இன்று முதல் ரஜினி மக்கள் மன்ற மாவட்டப் பொறுப்பாளர் அல்லது மாவட்டச் செயலாளர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்' என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் அமைப்பான ரஜினி மக்கள் மன்றம் சார்பில், அதன் நிர்வாக உறுப்பினர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 'தலைவரின் அறிவுரைப்படி கீழ்கண்ட அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அனைத்து மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணிகளின் அமைப்புப் பணிகள், இன்று முதல் ரஜினி மக்கள் மன்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் அல்லது மாவட்டச் செயலாளர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படவேண்டும்.

மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள், தினசரி தங்கள் அணிகளின் அமைப்புப் பணிபற்றிய அறிக்கையை ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளரிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று, அவர்களின் அறிவுரைப்படி மன்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, மாநில அமைப்புச் செயலாளர் இளவரசன் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும், மாவட்ட நிர்வாகிகளின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படும் முறை விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, 

1. மாவட்டம் / மாநகரம் சார்ந்த நிகழ்வில், மாவட்ட / மாநகர நிர்வாகிகளின் புகைப்படம் இடம்பெறலாம். 

2.மாநகரத்துக்கு உட்பட்ட மண்டலம் சார்ந்த நிகழ்வில், மாநகரச் செயலாளர் புகைப்படத்தைவிட சிறிய அளவில் மண்டல நிர்வாகிகள் புகைப்படம் இடம்பெறலாம். 

3.மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய / நகரம் சார்ந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் புகைப்படத்தைவிட சிறிய அளவில் ஒன்றிய நிர்வாகிகள் / நகர நிர்வாகிகள் புகைப்படங்கள் இடம்பெறலாம்.