வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (05/09/2018)

கடைசி தொடர்பு:18:44 (05/09/2018)

திடீர் நெஞ்சுவலி - பாலிவுட்டின் மூத்த நடிகர் திலிப் குமார் மும்பை மருத்துவமனையில் அனுமதி!

இந்தி சினிமாவின் மூத்த நடிகர் திலிப் குமார், உடல்நலக்குறைபாடு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திலிப் குமார்

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றவர் நடிகர் திலிப் குமார். பாலிவுட் திரையுலகில் சிறந்த நடிகராக விளங்கிவந்த திலிப் குமார், 1998-ம் ஆண்டு முதல் திரைப்படத்தில் நடிப்பதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். இந்த நிலையில், அவர் உடல்நலக்குறைபாடு காரணமாக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர், மார்புப் பகுதியில் ஏற்பட்ட வலி மற்றும் சுவாசிப்பதில் ஏற்பட்ட பிரச்னை ஆகியவை காரணமாக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. சினிமாவில் சிறந்த சேவையாற்றியதற்காக 2015-ம் ஆண்டு, அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை திலிப் குமாரின் நெருங்கிய நண்பரும், அவரது சமூக வலைதளக் கணக்குகளைப் பராமரித்து வருபவருமான ஃபைசல் பரூக்கி தெரிவித்துள்ளார். 95 வயதான திலிப் குமார், சிறுநீரகப் பிரச்னையால் கடந்த 2017ம் ஆண்டு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய அவர், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.