Published:Updated:

"பானுமதி அம்மாவுக்கு சீனியர் நடிகர்களே பயப்படுவாங்க!'' - ரோஜா #HBDBhanumathi

ஆ.சாந்தி கணேஷ்

பல பெரிய தலைவர்களே பெயர் சொல்லத் தயங்கிய எம்.ஜி.ஆரை, `மிஸ்டர். ராமச்சந்திரன்' என மிடுக்காக அழைத்தவர்.

"பானுமதி அம்மாவுக்கு சீனியர் நடிகர்களே பயப்படுவாங்க!'' - ரோஜா #HBDBhanumathi
"பானுமதி அம்மாவுக்கு சீனியர் நடிகர்களே பயப்படுவாங்க!'' - ரோஜா #HBDBhanumathi

`அஷ்டாவதானி' எனத் தென்னிந்திய சினிமா உலகில் இன்றுவரை கொண்டாடப்படுபவர், நடிகை பானுமதி. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் எனப் பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர். பல பெரிய தலைவர்களே பெயர் சொல்லத் தயங்கிய எம்.ஜி.ஆரை, `மிஸ்டர். ராமச்சந்திரன்' என மிடுக்காக அழைத்தவர். காதல் காட்சியே என்றாலும், சேர்ந்து நடிப்பது மிகப் பெரிய முன்னணி நாயகன் என்றாலும், `நோ கட்டிப்பிடி, நோ முத்தம்' எனக் கடைசி வரை உறுதியாக இருந்தவர். பானுமதியின் முகத்துக்கு மட்டுமன்றி, குரலுக்கும் ரசிகர்களிடம் பெரும் ஈர்ப்பு இருந்தது. எழுத்து, ஓவியம், நடிப்பு, பாட்டு, தயாரிப்பு, இயக்கம், நிர்வாகம் எனச் சிறப்பாகச் செயல்பட்டவர். சொந்தமாக ஸ்டுடியோ நடத்தியவர். தமிழ்நாட்டின் இசைக் கல்லூரி மற்றும் நடிப்புக் கல்லூரிகளின் முதல்வராகப் பணியாற்றியவர். இப்படி அறிவுச்சுடராக வலம்வந்த பானுமதி ராமகிருஷ்ணாவின் பிறந்த தினம் இன்று. 

பல வருடங்கள் கழித்து, `செம்பருத்தி' படத்தில் பானுமதி ராமகிருஷ்ணா நடிக்க வந்தபோது, அவருடன் நடித்தவர் நடிகை ரோஜா. முதல் படத்திலேயே இந்தக் கம்பீர மனுஷியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது. சீனியரான அந்த ஆளுமை இவரை எப்படி நடத்தினார். நினைவுகளைப் பகிர்கிறார், நடிகை ரோஜா செல்வமணி.

``பானுமதி அம்மாவின் உடல்மொழியைப் பார்க்கிறப்போ, எல்லோருக்குமே அவங்க மேலே மனசுக்குள் மரியாதை வரும். முதல் தடவை அவங்களை செட்டில் பார்த்தப்போ, பயம் வந்துச்சு. என்னுடன் அந்தப் படத்தில் நடிச்சவங்க, `நீங்க மட்டுமில்லே, அந்தக் காலத்தின் பெரிய பெரிய நடிகர்களே அம்மாவைப் பார்த்து பயப்படுவாங்க'னு சொன்னாங்க. `செம்பருத்தி' படத்தில் நடிக்கும்போது, எனக்குச் சுத்தமா தமிழ் தெரியாது. தெலுங்கு மட்டுமே தெரியும். தவிர, நடிப்புக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. அதனால், அவங்க இருக்கும் பக்கமே போக பயப்படுவேன். ஆனால், கதைப்படி எனக்கும் அவங்களுக்கும் சேர்ந்து நிறைய சீன்ஸ் வரும். அந்த நாள்கள் எல்லாம் சிங்கத்துடன் இருந்த உணர்வுதான்'' எனச் சிரிக்கிறார்.

``ஒரு கட்டத்தில், நான் தமிழ் தெரியாமல், யாரிடமும் பேசமுடியாமல் தனியா இருக்கிறதைப் பார்த்த பானுமதி அம்மாவே, வலிய வந்து பேச ஆரம்பிச்சாங்க. அந்தப் படம் முடியும் வரை, நிஜ அம்மா மாதிரி அக்கறையோடு பழகினாங்க. பேசினது குறைவு என்றாலும் அக்கறை இருக்கும். அறிவுரை சொல்றேன் என மத்தவங்க பர்சனலில் நுழைய மாட்டாங்க. எனக்கு மட்டும் ஒரேயொரு அறிவுரை சொல்லியிருக்காங்க. `புரொடியூசரின் கஷ்டம் தெரிஞ்சு நடந்துக்கணும். ஆர்ட்டிஸ்ட் கொஞ்ச நேரம் கழிச்சு வந்தாலும், அவங்களுக்குப் பண நஷ்டம்'னு சொல்வாங்க. அவங்களுக்கும் படங்களைத் தயாரித்த அனுபவம் இருந்ததால்தான், இந்த அறிவுரையைச் சொன்னாங்க.

படம் முழுக்க ஒரு வீட்டுக்குள்ள நடக்கும் என்பதால், என் பாட்டியுடன் இருந்த ஃபீல். நான் அவங்களை அம்மா எனக் கூப்பிட்டாலும், என்னைப் பேத்தி மாதிரி நடத்தினாங்க. அந்தப் படத்தில் வரும், `செம்பருத்திப் பூவு' பாடல், ஃபேமஸ். அந்தப் பாட்டின் முதல் வரியைப் பாடினபோதுதான் முதல் தடவையா அவங்களுடைய குரல்வளத்தைக் கேட்டேன். ஆச்சர்யத்தில் வாயைத் திறந்தபடியே வேடிக்கை பார்த்துட்டிருந்தேன். அந்த அளவுக்கு இம்ப்ரஸ் பண்ணுச்சு அவங்க குரல்'' எனப் பரவசமாகிறார் ரோஜா. 

படப்பிடிப்பில் பானுமதி எப்படி இருப்பார் என்பது குறித்துப் பேசும்போது, ``செட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்தே ஸ்பாட் ஜோக் சொல்வார். கொஞ்சம் யோசித்தால்தான் அதற்கான அர்த்தமே புரியும். அவ்வளவு ஸ்மார்ட் அவங்க. ஒருநாளும் ஷூட்டிங்குக்கு லேட்டா வந்ததில்லை. குரூப் ஆர்ட்டிஸ்டிடமும் கலந்து பழகுவாங்க. தான் ஒரு காலத்தின் மிகப்பெரிய கதாநாயகி என்கிற எண்ணம் அவங்ககிட்ட துளியும் இருந்ததில்லை'' என்கிற ரோஜா குரலில் மரியாதை மிளிர்கிறது.