வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (10/09/2018)

கடைசி தொடர்பு:12:25 (10/09/2018)

டாலர் அச்சடிக்கும் இடத்தில் பாதுகாவலராக ’அரங்கேற்றம்’ பிரமிளா..! #VikatanBreaks

கே.பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்' படத்தின் நாயகி,  நடிகை பிரமிளா. இவரை அத்தனை சுலபமாக மறந்துவிட முடியாது. அந்தப் படத்தில், தன் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். கதாநாயகி, கிளாமர், வில்லி எனப் பல பரிமாணங்களில் மின்னியவர். 1993-ம் ஆண்டு, பால் என்ற அமெரிக்கரைத் திருமணம் முடித்து, அங்கேயே செட்டிலானார். இப்போது எப்படி இருக்கிறார்? அவரிடம் பேசினோம்.

நடிகை பிரமிளா கணவருடன்

"அண்ணன் பார்த்து நடத்திய அரேன்ஜ் மேரேஜ்தான்.  அவர் அமெரிக்கர் என்பதால், லாஸ் ஏஞ்சலிலேயே குடியேறிவிட்டேன். அமெரிக்க டாலர் நோட்டுகள் அச்சடிக்கும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் நிறுவனத்தில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக 25 வருடங்கள் வேலைபார்த்தேன். அச்சடித்த டாலர் நோட்டுகளை டிரக் மூலம் பாதுகாப்பாக வங்கிகளில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதற்குப் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் பள்ளி இருக்கிறது. அதில், இரண்டு வருட கோர்ஸ் முடித்து, எக்ஸாமில் தேர்வாக வேண்டும். துப்பாக்கியால் சுடுவதற்கு, டாலர் நோட்டுகளை எடுத்துசெல்லும் டிரக்கை ஓட்டுவதற்கு, யாராவது டிரக்கை வழிமறித்தால் அட்டாக் செய்து கைதுசெய்வதற்கு எனப் பயிற்சி அளிப்பார்கள். இத்துடன், 'கிரிமினல் லா' மற்றும் 'சிவில் லா' படிக்க வேண்டும். இதில், முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றேன். கை நிறையச் சம்பளம், விதவிதமான அனுபவம் எனச் சந்தோஷமாக இருந்து, இப்போது ஓய்வு பெற்றுள்ளேன். எங்கள் வீட்டுக்குப் பின்னால், 2 ஏக்கரில் பழத்தோட்டம் போட்டிருக்கிறேன். வேட்டையாடுவதற்கு லைசென்ஸ் வைத்திருக்கிறேன். கை நிறைய ஓய்வூதியம், வேட்டை, விவசாயம், கணவருடன் காதல் என வாழ்க்கை சுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது" என்றவரின் குரலில் திருப்தி பொங்கி வழிகிறது.