வெளியிடப்பட்ட நேரம்: 21:38 (11/09/2018)

கடைசி தொடர்பு:21:38 (11/09/2018)

`2.0 டீசரை 3 டியில் இலவசமாகப் பார்க்க புதிய ஏற்பாடு!’- இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள, 2.0 படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில், டீசரை பொதுமக்கள் திரையரங்குகளில் பார்க்கும் வகையிலான புது முயற்சி ஒன்றை இயக்குநர் ஷங்கர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 2.O பட டீசர்

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது 2.0 திரைப்படம். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக கூடியுள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் வில்லனாக அறிமுகமாவதால், பாலிவுட் தரப்பிலும் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீபாவளியன்று படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, கிராஃபிக்ஸ் வேலைகள் முடிவடையாத நிலையில், படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

கிராஃபிக்ஸ் வேலைகள் காரணமாக படத்தின், ரிலீஸ் தேதியில் குழப்பம் ஏற்பட்டு வந்தநிலையில், நவம்பர் 29-ம் தேதி படம் வெளியாக உள்ளதாக, படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் டீசர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் 13-ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது, பொதுமக்கள் டீசரை 3 டியில் திரையரங்குகளில் பார்க்கும் விதமாக, இயக்குநர் ஷங்கர் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,  2.0 படத்தின் டீசரை பி.வி.ஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாகப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு +91 9099949466 என்ற எண்ணுக்கு  மிஸ்டு கால் கொடுத்தால் 2.0 டீசரை தியேட்டரில் இலவசமாகப் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புதுமுயற்சியை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.