`அரவிந்த் சாமிக்கு சம்பளம் கொடுப்பது ஏன் தாமதமாகிறது?’ - மனோபாலா விளக்கம் | Manobala explains about payment issue with actor Arvindsamy

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (12/09/2018)

கடைசி தொடர்பு:15:43 (13/09/2018)

`அரவிந்த் சாமிக்கு சம்பளம் கொடுப்பது ஏன் தாமதமாகிறது?’ - மனோபாலா விளக்கம்

2014-ம் ஆண்டு வெளிவந்த `சதுரங்க வேட்டை' படம் வெற்றியடைந்ததை அடுத்து, இதன் இரண்டாம் (சதுரங்க வேட்டை-2) பாகத்தை இயக்குநர் என்.வி.நிர்மல் குமார் என்பவர் இயக்கி வருகிறார். இதில், அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடைந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் மனோபாலாவிடம் 1.79 கோடி ரூபாய் சம்பள பாக்கி கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அரவிந்த் சாமி. 

அரவிந்த் சாமி

சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட இந்த மனு, நீதிபதி சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. தயாரிப்பாளர் மனோபாலாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மனோபாலாவிடம் பேசினோம். ``நான் அரவிந்த் சாமிக்கு கொடுக்க வேண்டிய சம்பளத் தொகை 1.25 கோடி ரூபாய். இந்த வழக்கை நீதிமன்றத்தில் முறையிட்டதால், ஜி.எஸ்.டி மற்றும் டி.டி.எஸ் வரி போன்றவற்றை, அவர்கள் கணக்கிட்டு மொத்தம் ரூ.1.79 கோடியாக மாற்றியுள்ளனர். இதுவே அவர் நீதிமன்றத்துக்குச் செல்லாமல் இருந்திருந்தால், தொகை இவ்வளவு உயர்ந்திருக்காது. ஜி.எஸ்.டி செலுத்தும் தொகையில் நான் இன்னொரு சிறு பட்ஜெட் படமே இயக்கிவிடுவேன். சம்பளம் பாக்கி இருப்பதால், அரவிந்த் சாமி டப்பிங் பேசுவதற்கு மறுத்துவிட்டார். 

மனோபாலா

இதுகுறித்து விஷால், அரவிந்த் சாமியிடம் `நீங்கள் டப்பிங் பேசிவிடுங்கள். உயர் நீதிமன்றத்துக்கெல்லாம் செல்ல வேண்டாம். தயாரிப்பாளருக்கு இன்னும் கொஞ்ச நேரம் கொடுத்தால், சம்பள பாக்கி உங்கள் கைக்கு வந்துவிடும்' என்று சமாதானம் செய்ய முயற்சி செய்தார். இருந்தும், அவர் கேட்கவில்லை. இப்படி அத்தனை நடிகர்களும் நீதிமன்றத்துக்குச் சென்றுகொண்டிருந்தால், சினிமா தொழில் படுத்துவிடும். பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கியதுதான் என்னுடைய மிகப்பெரிய தவறு. கேரளா மற்றும் ஆந்திராவில் தயாரிப்பாளர்களுக்கான மிகப்பெரிய சப்போர்ட் நடிகர்களிடமிருந்து கிடைக்கிறது. அரவிந்த் சாமியின் சம்பளத்தைத் தர மாட்டேன் என்று ஒருபோதும் நான் கூறியதில்லை. ரூ.1.79 கோடி என்பது சற்று பெரிய தொகை. அதை முடிந்தளவு விரைவில் கொடுப்பதற்கான அத்தனை வேலைகளையும் செய்து வருகிறேன்" என்று கூறினார். 
 


[X] Close

[X] Close