வெளியிடப்பட்ட நேரம்: 21:48 (14/09/2018)

கடைசி தொடர்பு:21:48 (14/09/2018)

`இது எனக்கு முக்கியமான நாள்' - ஹீரோவாக அறிமுகமாகும் பிக் பாஸ் ஆரவ்..!

`பிக் பாஸ்’ புகழ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரவ்

 

`பிக் பாஸ்’ முதல் சீஸன் மூலம் புகழ்பெற்றவர் ஆரவ். அதில் வெற்றியாளராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸூக்கு வருவதற்கு முன் விளம்பரங்களில் மாடலாக நடித்தவர் ஆரவ், “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் அவர் படத்தில் நடிக்கப்போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், அது குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையே, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீஸன் 2-ல் கெஸ்ட்டாக சென்றுள்ளார். இந்நிலையில் இவரின் முதல் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு 'ராஜபீமா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் சந்தோஷ் நரேஷ் படத்தை இயக்குகிறார். 

வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் யானையுடன் உள்ளார் ஆரவ். தன்னுடைய முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காகப் பல நாள் காத்திருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்றுள்ளபோது 'ராஜபீமா' படத்தின் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், ``இது எனக்கு முக்கியமான நாள். எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. இது நிச்சயம் நல்ல படமாக இருக்குமென நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.