ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் வித்யாபாலன்!

தமிழ் சினிமாவில் பயோபிக் டைப்பிலான திரைப்படங்கள் வெளிவந்தால் ஜெயிக்குமா என்கிற கேள்வி நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால், அந்தக் கேள்வியை நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'நடிகையர் திலகம்' தீர்த்துவைத்தது. அதில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பையும், இயக்குநர் அஷ்வின் நேக்கின் நுட்பமான இயக்கத்தையும் திரையுலகினர் வியந்து பாராட்டினர். சினிமாவில் நடிப்பில் உச்சத்தையும், இறுதியாகத் தனி வாழ்க்கையில் துயரத்தையும் சுமந்து மறைந்த சாவித்திரியின் பயோபிக் படத்தின் வெற்றி சினிமா முக்கிய புள்ளிகளின் புருவத்தை உயரவைத்தது. 

இயக்குநர் விஜய் - வித்யாபாலன்

அந்தவகையில் என்.டி.ராமராவ், பால் தாக்கரே, மன்மோகன் சிங், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரின் பயோபிக் படங்கள் தயாராகிவருகின்றன. அதேபோல் சமீபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்படவுள்ளது. சிறுமியிலேயே சினிமாவில் என்ட்ரி, அடுத்து எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு ஜோடி. அதன்பின் அரசியல் பிரவேசம் இறுதியில் தமிழ்நாடு முதல்வர் என்று படிப்படியாக உச்சத்தைத் தொட்டு மறைந்த ஜெயலலிதா வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதை புரிந்து அவரின் வரலாற்றை எடுக்கப் பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

அப்படி, ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க ஒரு பக்கம் டைரக்டர் ஏ.எல்.விஜய் முயல்கிறார் என்றும், இன்னொரு பக்கம் பாரதிராஜா என்றும் செய்தி பரவி வந்தது. சில வாரங்களுக்கு முன்பு டைரக்டர் விஜய்யிடம் இதுகுறித்து கேட்டோம். ``ஜெயலலிதா மேடம் படத்துக்காக ரொம்ப ரொம்ப ரிசர்ச், ஹோம் ஒர்க் செய்யணும். 2019-ம் ஆண்டு ஆரம்பிக்கலாம்னு நானும், தயாரிப்பாளர் விஷ்ணுவும் திட்டமிட்டிருக்கோம்' என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.

ஜெயலலிதாவின் பயோபிக் குறித்து டைரக்டர் விஜய்யின்  அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது குறித்து முக்கியமான புள்ளி ஒருவரிடம் பேசினோம்.``ஜெயலலிதா வேடத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் உள்ள முன்னணி நடிகைகளிடம் பேசினார்கள். இறுதியாக ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்குப் பொருத்தமானவர் வித்யாபாலன் என்று முடிவெடுத்து, இப்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்' என்று நம்மிடம் தெரிவித்தார். 

இந்தியாவை வெள்ளைக்காரன் ஆண்டபோது மெட்ராஸ் மாகாணம் எப்படி இருந்தது, கூவத்தில் படகு போக்குவரத்து எப்படி நடந்தது, அண்ணாசாலை, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அப்போதைய தோற்றம் என்று நம்மை அந்த காலகட்ட சென்னைக்கு 'மதராச பட்டினம்' படத்தின் வாயிலாக அழைத்துச் சென்றவர், இயக்குநர் விஜய். அவரின் இயக்கத்தில் வரும் பயோபிக் படத்தில் வித்யாபாலன் நடிக்கவுள்ளார் என்கிற செய்தி சினிமா ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!